நடிகர் சங்கம் பக்கம் செல்லாமல், மெரீனாவுக்குச் சென்ற விஜய்

தினமலர்  தினமலர்
நடிகர் சங்கம் பக்கம் செல்லாமல், மெரீனாவுக்குச் சென்ற விஜய்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நேற்று கதவை மூடிக் கொண்டு, நிழலுக்கு பந்தல் அமைத்துக் கொண்டு, உட்கார மேடை, அதன் மேல் நாற்காலிகள் என சொகுசாக மாணவர்களின் அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வந்து உடனே சென்றதாகச் சொன்னார்கள். நேற்று காலை வரை எந்த அறிக்கையும் தராத, எங்கேயிருக்கிறார் என்று கூடத் தெரியாத அஜித்தும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று சென்றார். நடிகர் சங்க போராட்டத்திற்கு வருவதற்கு முன்னர் சூர்யா, மெரீனாவிற்கு சென்று இளைஞர்களுடன் இளைஞராக வந்து அமர்ந்து போராடினார்.

நடிகர் என்ற அடையாளத்துடன் அங்கு யாரும் வரக் கூடாது, எங்களில் ஒருவராகத்தான் வர வேண்டும் என போராட்டத்தில் உள்ள இளைஞர்கள் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்தே உறுதியுடன் இருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, ஹிப் ஹாப் தமிழா ஆகியோர் அப்படித்தான் போராடும் இளைஞர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

நடிகர் சங்கப் போராட்டக் களத்திற்கு விஜய் நேற்று செல்லவில்லை. நேற்று இரவு அவர் மெரீனா கடற்கரைக்கு முகத்தை துணியால் மூடிக் கொண்டு சென்று, போராடும் இளைஞர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். முகத்தை மறைத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டாம் என சிலர் சொன்னாலும் நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணித்து போராட்டக் களமான மெரீனாவிற்கே விஜய் சென்று அவர்களுடன் ஒருவராக இருந்ததற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தற்போது பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மூலக்கதை