முதல்வன், ரமணா காட்சிகளை நேரில் உணரும் மக்கள்

தினமலர்  தினமலர்
முதல்வன், ரமணா காட்சிகளை நேரில் உணரும் மக்கள்

திரைப்படங்களில் மட்டுமே பார்த்து மெய் சிலிர்த்த காட்சிகளை இன்று சென்னையில், மதுரையில், கோவையில், நெல்லையில், திருச்சியில், மற்ற ஊர்களில் என தமிழ் மக்கள் நேரில் உணர்ந்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த உணர்வும், உத்வேகமும், பொறுமையும், அமைதியும், அறவழியும் இத்தனை நாட்களாக எங்கிருந்தது என அரசியல்வாதிகளும், நடிகர்களும் அதிர்ந்து போய்தான் உள்ளனர்.

அரசியல்வாதிகளையும், தவறு செய்பவர்களையும் தட்டிக் கேட்கும் ஹீரோக்களை திரையில் மட்டுமே பார்த்த ரசிகர்கள், இன்று அந்த ஹீரோக்களே எங்கள் பின்னாடி வர வேண்டாம், நாங்களே போராடிக் கொள்கிறோம். நடிகன் என்ற அடையாளத்துடன் போராட்டக் களத்திற்கு வராதீர்கள் என நடிகர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே அதிர்ச்சியைக் கொடுத்து வருகிறார்கள்.

இன்று போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள், என பலரும் 20 வயதுக்குள் இருப்பவர்கள்தான். 'முதல்வன், ரமணா' படங்களில்தான் மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தி திகைக்க வைத்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மாணவர் போராட்டம் என்றால் இன்றைய இளைஞர்களுக்கு அந்தப் படங்கள்தான் சட்டென்று ஞாபகத்திற்கு வரும். அந்தப் படங்கள் வந்த போது இப்போது போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இரண்டு, மூன்று வயது குழந்தைகளாத்தான் இருந்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு காட்சியை தமிழ்நாட்டில் நேரில் பார்ப்பதற்கு 20 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்போது நடக்கும் மாணவர்களின் போராட்டத்தை மையமாக வைத்து எதிர்காலத்தில் பல திரைப்படங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூலக்கதை