போராட்டாக்காரர்கள் மீது 1000 காளைகளை ஏவிவிட வேண்டும் - ராம்கோபால் வர்மா திமிர் பேச்சு

தினமலர்  தினமலர்
போராட்டாக்காரர்கள் மீது 1000 காளைகளை ஏவிவிட வேண்டும்  ராம்கோபால் வர்மா திமிர் பேச்சு

சிவா என்ற இளைஞன் ஒரு சிறிய ஊரிலிருந்து படிப்பதற்காக விஜயவாடா வருகிறான். கல்லூரியில் அரசியல்வாதிகள், ரவுடிகளின் ஆதரவைப் பெற்று தேர்தலில் நிற்காமலேயே மாணவர் தலைவனாக இருக்கும் ஜே.டி. என்பவனை எதிர்க்க ஆரம்பிக்கிறான் சிவா. நடைபெற இருக்கும் கல்லூரித் தேர்தலில் தன் நண்பனை நிறுத்துகிறான் சிவா. இதனால் ஆத்திரமடைந்த ஜே.டி. ரவுடி பவானி துணையுடன் சிவாவின் நண்பன் மல்லியைக் கொலை செய்கிறான். வெகுண்டெழும் சிவா, அரசியல்வாதிகளின் ஆதரவுடன், ரவுடியிசம் செய்யும் பவானி, ஜே.டி. யை எதிர்க்க தானும் களத்தில் இறங்குகிறான். ஆனால், இப்போது சென்னை மெரீனாவில் மாணவர்கள் அறவழிப் போராட்டத்தை நடத்துகிறார்களே அப்படியல்ல, ரவுடியை எதிர்க்க அவனும் ரவுடியாகவே மாறுகிறான். அதன் பின் சிவாவிற்கும் பவானிக்கும் நடக்கும் போராட்டம்தான். தமிழில் 1990ம் ஆண்டு நாகார்ஜுனா, அமலா நடிக்க ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த 'உதயம்' படத்தின் கதை. தெலுங்கில் 'சிவா' என்ற பெயரில் 1989ல் வெளிவந்த இந்தப் படத்தின் கதை கூட ஒரிஜனல் கதை அல்ல, ப்ரூஸ் லீ நடித்து வெளிவந்த 'வே ஆப் த டிராகன்' படத்தின் காப்பிதான்.

உதயம் படம் தமிழில் டப்பிங் படமாக வெளிவந்தாலும் 175 நாட்கள் ஓடியது. அரசியல்வாதிகளை எதிர்ப்பது, ரவுடிகளை எதிர்ப்பது ஆகியவற்றையெல்லாம் திரையில் காட்டி இளைஞர்களையும், ரசிகர்களையும் ஏமாற்றிய பல இயக்குனர்கள் நிஜ வாழ்வில் வேறுவிதமாக இருப்பார்கள் என்பதற்கு ராம்கோபால் வர்மா சரியான உதாரணம்.

இது எதற்கு இப்போது என்கிறீர்களா..?. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்ற தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் போராட்டத்தைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் இன்று பிரபலமாக இருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஜல்லிக்கட்டுக்கு எதிராக நேற்று டிவீட் செய்திருக்கிறார்.

ஆந்திராவில் 'கொடிபன்டம்' என்ற பெயரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டைப் பற்றி எதுவும் சொல்லாமல் தமிழ் இளைஞர்கள் மீது 1000 காளைகளை ஏவிவிட வேண்டும் என்று அவர் டிவீட்டியிருக்கிறார்.

ராம்கோபால் வர்மா இதுவரை எடுத்துள்ள பெரும்பாலான திரைப்படங்கள் வன்முறைகளையும், ஆபாசங்களையும் கட்டவழித்துவிடப்பட்ட படங்களே. மும்பை தாக்குதல் சமயத்தில் கூட முதல்வருடன் சென்று மக்களின் வலிகளுக்கிடையே அதை எப்படி படமாக்கி பணம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றவர். ராம்கோபால் வர்மா இயக்கிய பல படங்கள் தழுவல் படங்களாகவோ, ஆந்திராவில் நிஜ வாழ்வில் இருந்த ரவுடிகள் சம்பந்தப்பட்ட படங்களாகத்தான் இருக்கும். அப்படிப்பட்டவர் வழக்கம் போல பரபரப்பை ஏற்படுத்தி பெயர் வாங்குவதற்காக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி டிவீட்டுகளைப் போட்டுள்ளார். அவருக்கு தமிழ் இளைஞர்களும் மற்றவர்களும் சரியான பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மூலக்கதை