கொல்கத்தாவில் நாளை கடைசி ஒன்டே ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா ஆறுதல் வெற்றிக்கு ஏங்கும் இங்கிலாந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொல்கத்தாவில் நாளை கடைசி ஒன்டே ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா ஆறுதல் வெற்றிக்கு ஏங்கும் இங்கிலாந்து

கொல்கத்தா: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என  இங்கிலாந்து இழந்தது.

தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், புனே மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு போட்டியிலும் தோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்துள்ளது. கடைசி போட்டி நாளை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில்  நடைபெற உள்ளது.

இதில் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, ஒயிட்வாஷ் முனைப்பில் களம் இறங்குகிறது. புது கேப்டன் கோஹ்லி ஆக்ரோஷத்துடன் களத்தில் செயல்பட்டு வருகிறார்.



முதல் இரு போட்டியிலும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மிடில் ஆர்டர் கைகொடுத்ததால் இந்தியா வென்றது.

யுவராஜ், டோனி, கேதர் ஜாதவ் சூப்பர் பார்மில் உள்ளனர். தவான் ரன் குவிக்க தடுமாறும் நிலையில், காயத்தாலும் அவதிப்படுகிறார்.

இதனால் நாளைய போட்டியில் அவருக்கு பதிலாக ரகானே களம் இறங்க வாய்ப்பு உள்ளது. அஸ்வின் அல்லது ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மிஸ்ராவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம், மற்றபடி பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

மறுபுறம் இங்கிலாந்து அணி  ஆறுதல் வெற்றியாவது பெறவேண்டிய நெருக்கடியில் உள்ளது.

கட்டாக்கில் வெற்றியை நெருங்கி தோல்வி அடைந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். ரூட், ராய், மோர்கன் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் குவித்தாலும் பந்துவீச்சு எடுபடவில்லை.

2 போட்டியிலும் முதலில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தாலும் கடைசியில் ரன்களை வாரி இறைத்தனர். இந்த தவறை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் மதியம் 1. 30 மணிக்கு தொடங்குகிறது. பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் 2வது பந்து வீசுவது சிரமமாக இருக்கும்.

இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும்.

அலெக்ஸ் ஹேல்ஸ்  அவுட்
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார்.

கட்டாக்கில் டோனி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது வலது கை  விரலில் காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறி நாடு திரும்புகிறார். டி. 20 போட்டியில் அவருக்கு பதில் புதிய வீரர் அறிவிக்கப்பட உள்ளார்.



ஈடன்கார்டன் சாதனை
* கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரையில் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 11 போட்டியில் வென்றுள்ளது.

7 ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது. 2 போட்டி ரத்தானது.

கடைசியாக இலங்கையுடன் 2014 நவ. 13ம் தேதி நடந்த போட்டியில்152 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

* இங்கு அதிகபட்சமாக ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக 264 ரன் அடித்துள்ளார்.

காம்பீர் 150 ரன் எடுத்துள்ளார். அதிகபட்சமாக இந்திய அணி இலங்கையுடன் 5 விக்கெட் இழந்து 404 ரன் குவித்துள்ளது.

இங்கு யாரும் இதுவரையில் இருமுறை சதம் அடித்ததில்லை. நாளைய போட்டியில் கோஹ்லி சதம் அடிக்கும் பட்சத்தில் புதிய சாதனை படைக்கலாம்.


.

மூலக்கதை