அமைச்சரின் பெயரைக் கூறி கூட்டுறவு சங்கங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு - நாளை மறுநாள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமைச்சரின் பெயரைக் கூறி கூட்டுறவு சங்கங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு  நாளை மறுநாள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் - தமிழகம் முழுவதும் உள்ள 4500 வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடார்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க கரூர் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொது வினியோகத்திட்ட மானியம் கடந்த 4 ஆண்டாக முறையாக வழங்கவில்லை.

2006ல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது முறையாக வரவு வைக்கப்படவில்லை. ரூபாய்நோட்டு பிரச்னையால் கடும்நிதி நெருக்கடியில் உள்ளது.

அமைச்சரின் பெயரைக்கூறி ஊழல் முறைகேடுகள் நடக்கிறது.
கடன்சங்க பொதுசேவை மைய பயன்பாட்டிற்கு பயோமெட்ரிக் கருவி தேவையற்ற சூழலில் வாங்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 1. 5 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதால் திரும்பப்பெற வேண்டும்.

புதிய கிட்டங்கி, அலுவலக கட்டிடம் கட்ட கட்டாயவசூல், காலி சாக்குகளை விற்பனை செய்வதில் ஆண்டுக்கு ரூ. 70 கோடி, கடந்த ஐந்தாண்டுகளில் ரூ. 350 கோடி, சங்கங்களில் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வேளாண்மை சேவை மையத்திற்கு டிராக்டர், பவர்டிரில்லர், கதிர் அறுவடை இயந்திரம், ரோட்டே வாட்டர் போன்ற இயந்திரங்கள் அலுவலர்கள் நிர்ப்பந்தத்தினால் கூடுதல் விலையில் கொள்முதல் செய்யப்பட்டு தற்போது செயல்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் சங்கங்களுக்கு  ரூ. 10 கோடிவரை இழப்பு ஏற்பட்டு மோசடி நடந்துள்ளது.

ஒவ்வொரு சங்கமும் தனித்தனி நிர்வாகத்தை கொண்டு செயல்பட்டுவரும் நிலையில் தனிநபர் ஆதாயம் அடையும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக கைவிடவேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நாளைமறுநாள் (23ம் தேதி) கரூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.

மூலக்கதை