செல்போன் டவரில் ஏறி ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
செல்போன் டவரில் ஏறி ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்

காரைக்கால் - காரைக்கால் அடுத்த விழிதியூர் கிராமத்தில் நேற்று தனியார் செல்போன் டவரில் இளம் போராளிகள் அமைப்பை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பொன்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் அஜய், அருண், மணிகண்டன், சுசிதரன் ஆகிய 5 பேரும் திடீரென ஏறினர். அவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் உடனே முன்வர வேண்டும்.

உச்சநீதிமன்றம் அல்லது சட்டசபை அவசர கூட்டம் கூட்டி ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

கரூர் - கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆண்டிபட்டிக்கோட்டை பாலம் அருகே பள்ளபட்டியை சேர்ந்த 30 பேர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், பீட்டாவை தடை செய்யக் கோரியும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சேக்பரீத்(37), சாகுல்அமீது(29) ஆகிய இருவரும் திடீரென அருகிலிருந்த செல்போன் டவரில் ஏறி ஜல்லிக்கட்டுக்கு தடையை விலக்கக் கோரியும், பீட்டாவை தடை செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் அரிக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (32). கூலித்தொழிலாளி.

இவர் நேற்றிரவு 9 மணியளவில் கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு செல்போன் டவரில் ஏரி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினார். அவரது நண்பர்கள் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வாலிபர் கீழே இறங்கினார்.

திருப்பூர் - திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலை மதுரை பைபாஸ் அருகே உள்ள செல்போன் கோபுரத்தின் மீது மனோஜ்குமார், தினேஷ், கணேஷ் ஆகிய 3 இளைஞர்கள் 60 அடி உயரத்திற்கு ஏறி நின்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இளைஞர்களை கீழே இறக்கினர்.

.

மூலக்கதை