தமிழகத்தில் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மெரினாவில் 5வது நாளாக மக்கள் வெள்ளம் - இன்று வரை உற்சாகம் குறையாத இளைஞர் கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மெரினாவில் 5வது நாளாக மக்கள் வெள்ளம்  இன்று வரை உற்சாகம் குறையாத இளைஞர் கூட்டம்


சென்னை - தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மெரினாவில் இன்று 5வது நாளாக போராட்டம் தொடருகிறது. போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இரவு பகல் பாராமல் உற்சாகம் குறையாமல் இளைஞர்கள், மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 3 வருடங்களாக நடைபெறவில்லை. இதனால் கொதித்தெழுந்த இளைஞர்கள், மாணவர்கள் கடந்த 16ம் தேதி அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னை ெமரினா கடற்கரையில் கடந்த 17ம் தேதி இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று கூடி அமைதி வழியில் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டத்தை டிவி, பத்திரிகை மற்றும் வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் தொடர்ந்து அதிவேகமாக பரப்பி வருவதால், இளைஞர்கள், மாணவர்கள் மெரினா கடற்கரை நோக்கி வந்து கொண்டே இருந்தனர்.



சிறிது சிறிது கூட்டமாக சேர்ந்து ஒரே நாளில் 50 ஆயிரத்தையும் தாண்டியது கூட்டம். இப்படி தொடங்கிய போராட்டத்தில் கொஞ்சம் கூட தொய்வு ஏற்படாமல் போராட்டத்தில் ஈடுபடுவோரின் மாணவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

கடந்த 17ம் தேதி காலையில் தொடங்கிய போராட்டம் இரவு பகல் என விடாமல் இன்று 5வது நாளை எட்டியுள்ளது. நேற்று, ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் பந்த் என அறிவிக்கப்பட்டது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என மூன்று மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக மெரினாவில் குவிந்தனர். இதனால் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் போராட்டக்காரர்களாகவே காட்சி அளித்தனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை, மெரினாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் பேர் திரண்டதால், உலகின் மிகப்பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தது. இதேநிலைதான் தமிழகம் முழுவதும் நீடித்தது.

போராட்டம் நடைபெறாத இடமே இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவிலும் இந்தக் கூட்டம் அசையாமல் இருந்தது.

அதேநேரத்தில் மெரினாவுக்குச் செல்லும் சாந்தோம் நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, திருவல்லிக்கேணியில் இருந்து மெரினா செல்லும் பாரதி சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வரும் சாலைகள் என அனைத்து வழிகளில் இருந்தும் வாகனங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் மெரினாவுக்கு வந்தனர். பலர் குடும்பத்துடனும் வந்தனர்.

இதனால் அதிகாலை வரை கூட்டம் அசையாமல் இருந்தது. அதிகாலையில்தான் பலர் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், இன்று மெரினாவில் 5வது நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை 6 மணி முதலே இளைஞர்கள், மாணவ - மாணவிகள் மெரினா கடற்கரை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்.

நேரம் ஆக ஆக மெரினாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் போட்டனர். நேற்று 10 லட்சம் பேர் வந்தனர்.

இன்று அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘‘ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தயார், போராட்டத்தை கைவிடுங்கள்’’ என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் கூறி விட்டனர்.

இதையடுத்து, வாடிவாசலில் காளைகளை அவிழ்த்து விடும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என்ற கோரிக்கையில் மாணவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

இதனால், போராட்டக்காரர்களை மெரினாவில் இருந்து அப்புறப்படுத்த முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள்.

.

மூலக்கதை