‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’வாடி வாசல் திறக்க கொட்டும் மழையிலும் அறப்போர் மக்கள் எழுச்சியாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’வாடி வாசல் திறக்க கொட்டும் மழையிலும் அறப்போர் மக்கள் எழுச்சியாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம்

சென்னை - வாடிவாசலை திறந்து, முறையாக ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 16ம் தேதி முகநூல் நண்பர்கள் குழுவினர், அறவழியில் போராட்டத்தை துவக்கினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 227 பேரை 17ம் தேதி அதிகாலை, போலீசார் கைது செய்து, தரதரவென இழுத்துச் சென்றனர்.

இதை கண்டித்து, சென்னை மெரீனா மற்றும் மதுரையில் தமுக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் திரண்டு போராட்டத்தை துவக்கினர். இந்த போராட்டம் தற்போது தமிழகம் முழுவதும் தீயாக பரவி கொழுந்து விட்டு எரிகிறது.

மக்கள் எழுச்சியாக மாறி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என்ற நிலைமாறி குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று இளைஞர்களின் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் என போராட்டங்கள் எழுச்சியுடன் நடந்தன.

மதுரை தமுக்கத்தில் நேற்றைய போராட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இன்று அதிகாலை 4 மணி முதல் மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது.

மதுரை தமுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மழையையும் பொருட்படுத்தாமல் காலை 5. 30 மணிக்கே தயாராகி, மழையில் நனைந்தவாறு, ஆர்ப்பாட்டத்துடன் தங்களது இன்றைய போராட்டத்தை துவக்கினர்.
அலங்காநல்லூரில் கேட்டு கடை அருகே சாரல் மழையில் அமர்ந்தவாறு, இளைஞர்கள் வாயை மூடி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 4வது நாளாக மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் கல்லூரிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் பகுதியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் முன்பாக 4வது நாளாக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மழையை பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர்: விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் இன்று 4வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

திண்டுக்கல்: திண்டுக்கல் கல்லறை தோட்டம் முன்பு தொடர்ந்து 5வது நாளாக இன்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராடி வருகின்றனர்.

தேனி: தேனி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே 4வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. கொட்டும் மழையில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 5 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்கள்: திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து 4வது நாளாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம்: சேலத்தில் கடந்த 3 நாட்களாக கடும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் நேற்று 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்று 4வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்தில் பங்கேற்ற வண்ணம் உள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனை அருகே பெங்களூரில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயிலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நேற்று முன்தினம் சிறைபிடித்து வைத்துள்ளனர். 3வது நாளாக இன்றும் ரயிலை இளைஞர்கள் சிறை வைத்துள்ளனர்.

தர்மபுரி: தர்மபுரியில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி இன்று 4வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்: நாமக்கல்லில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஏறுதழுவுதல் ஆர்வலர்கள் அமைப்பு சார்பில் இன்று 4வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் 13 இடங்களில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

கோவை: 5வது நாளாக இன்றும் மாணவர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோவை வஉசி மைதானத்தில் திரண்டுள்ளனர்.
ஈரோடு: ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3. 30 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் அருகில் உள்ள மல்லிகை அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் முன்பு 4வது நாளாக விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வாடிவாசல் திறக்கப்படும் வரை நகர மாட்டோம் என கூறி அங்கேயே திரண்டுள்ளனர்.

நெல்லை: நெல்லை வஉசி மைதானத்தில் 5ம் நாளாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது. தூத்துக்குடி: தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் இன்று 5வது நாளாக அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சிறுவர் சிறுமியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதே போல் கடலூர், விழுப்புரம், வேலூரில் 5வது நாளாக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

2வது நாளாக நிற்கும் ரயில்
நேற்று முன்தினம் மதியம் மதுரை, செல்லூர் வைகையாற்று பாலத்தில் மறிக்கப்பட்ட கோவை-நாகர்கோவில் ரயில், அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிமீ தொலைவில் உள்ள மதுரை ரயில் நிலையத்துக்கு, இந்த ரயிலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் மற்றும் மதுரை போலீஸ் உயரதிகாரிகள், போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் வாடிவாசலை திறந்து, முறையாக ஜல்லிக்கட்டு நடத்தும் வரை, ஒரு அடி கூட ரயிலை நகர்த்த விட மாட்டோம் என இளைஞர்கள் உறுதியாக தெரிவித்தனர்.   இன்று அதிகாலை கொட்டும் பனி, சாரல் மழையிலும் ரயில் முன்பு  நின்று, மத்திய அரசை எதிர்த்து பொதுமக்கள் முழக்கமிட்டனர்.

இதையடுத்து 44 மணி நேரத்துக்கும் மேலாக, பாலத்திலேயே நிற்கிறது கோவை-நாகர்கோவில் ரயில்.

.

மூலக்கதை