ஊத்துக்கோட்டை பகுதியில் வர்தா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு திடீர் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊத்துக்கோட்டை பகுதியில் வர்தா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு திடீர் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை - ஊத்துக்கோட்டை பகுதியில் வர்தா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். வர்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள கொமக்கம்பேடு, மாகரல், தாமரைப்பாக்கம், அமணம்பாக்கம் மற்றும் சேத்துப்பாக்கம், செம்பேடு ஆகிய கிராமங்களில் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டது.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை  நிவாரண உதவிகள் வழங்கவில்லை. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுடன் விவசாயிகள் சங்கத்தினர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜி. சம்பத் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், அரசன், கிருஷ்ணன், செல்வம், ஏழுமலை, மனோகரன், டில்லி முன்னிலை வகித்தனர்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாசில்தார் கார்குழலி  ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘’ கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள்.

நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து மனு கொடுத்தனர்.

அவற்றை பெற்றுக்கொண்ட தாசில்தார், ‘’ விசாரணை நடத்தி  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


.

மூலக்கதை