அலங்காநல்லூர், பாலமேட்டில் ஏற்பாடுகள் தீவிரம்: நாளை ஜல்லிக்கட்டு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
அலங்காநல்லூர், பாலமேட்டில் ஏற்பாடுகள் தீவிரம்: நாளை ஜல்லிக்கட்டு?

அலங்காநல்லூர் - தமிழக அரசின் அவசர சட்டம் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதையடுத்து, அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தெரிகிறது.

இதற்காக வாடிவாசல்களை மதுரை கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு ஒரே நாளில் மத்திய அரசு அனுமதி அளித்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது.

இதையடுத்து, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று இன்று மாலை அவசரச் சட்டம் வெளியாக உள்ளது. இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று இளைஞர் கூட்டம் அறிவித்துள்ளதால், நாளையே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டுக்கு வந்து வாடிவாசல்களை மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 அலங்காநல்லூரில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என அப்பகுதி மக்கள், காளை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர். அலங்காநல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் தற்போது தயார் நிலையில் உள்ளன என்றும், நாளையே ஜல்லிக்கட்டை நடத்தினாலும் அருகே திண்டுக்கல், தேனி, திருச்சி மாவட்டங்களில் இருந்து உடனடியாக காளைகள் வந்து களத்தில் இறங்கி விடும் என்றும் அவர்கள் கூறினர்.
அலங்காநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், 'கடந்த 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடக்காத நிலையிலும், நம்பிக்கையுடன் நான் காளைகளை பராமரித்து வருகிறேன்.

ஜல்லிக்கட்டை உடனே நடத்தினாலும், என்னிடம் உள்ள காளைகள், தயாராக உள்ளன. பஞ்சு என்ற பெண் கூறுகையில், 'கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காதாதால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.

இப்போது வாடிவாசலில் அவிழ்த்து விட காளைகளை தயாராக வைத்துள்ளோம்’’ என்றார்.

குமார் கூறுகையில், 'நான் 4 காளைகளை வளர்த்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காததால், பல லட்சம் மதிப்புள்ள 3 காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டேன்.

ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையில், ஒரே ஒரு காளையை தொடர்ந்து பராமரித்து, பயிற்சி அளித்து தயாராக வைத்துள்ளேன். அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தற்போது மீண்டும் கிராக்கி ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற அறிவிப்பையடுத்து, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் காளைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அலங்காநல்லூர், வாடிப்பட்டி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் காளை வளர்ப்போர் மற்றும் விற்போரிடம் காளைகளை விலைக்கு வாங்க ஏராளமானோர் போட்டியிடுகின்றனர்.

.

மூலக்கதை