விக்ரம் படத்திற்கு மார்ச் மாதம் கால்சீட் கொடுத்த சாய் பல்லவி!

தினமலர்  தினமலர்
விக்ரம் படத்திற்கு மார்ச் மாதம் கால்சீட் கொடுத்த சாய் பல்லவி!

இருமுகனைத் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளார் விக்ரம். கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம், ஹரியின் சாமி-2, விஜயசந்தரின் பெயரிடப்படாத படம் என அவரது பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதில் சிங்கம்-3யை இயக்கியுள்ள ஹரி, தற்போது சாமி-2 படத்தின் கதை வேலைகளில் இறங்கி விட்டார். அந்த வகையில், மே அல்லது ஜூன் மாதம் முதல் அவர் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். அதனால் அதற்குள் மற்ற இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார் விக்ரம்.

ஆனால், கெளதம்மேனனின் துருவநட்சத்திரம் எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு நடைபெறாமல் உள்ளது. அதனால் பிப்ரவரி 5-ந் தேதி முதல் விஜயசந்தர் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி விட்டது. அதற்காக சமீபத்தில் வடசென்னை, மயிலாப்பூர் பகுதிகளில் லொகேசன் பார்த்து வந்துள்ளார் விஜய சந்தர். முதல்கட்ட படப்பிடிப்பு 22 நாட்கள் வரை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், விக்ரம், சூரி உள்ளிட்ட நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக உள்ளதாம்.

அதையடுத்து, தற்போது மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, மார்ச் மாதம் முதல் விக்ரம் படத்துக்கு கால்சீட் கொடுத்துள்ளார். அதனால் மார்ச் மாதம் தொடங்கும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் சாய் பல்லவியின் தனிகாட்சிகள் மற்றும் விக்ரமுடன் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கு கிறார்களாம்.

மூலக்கதை