காமெடியன் கொட்டாச்சியின் சினிமா லட்சியம்!

தினமலர்  தினமலர்
காமெடியன் கொட்டாச்சியின் சினிமா லட்சியம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் காமெடியனாக நடித்து வருபவர் கொட்டாச்சி. என்னை பாதித்த நடிகர் நாகேஷ். அவர் நடித்தது போன்று ஒரு படத்திலேனும் கண்கலங்க வைக்கும் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது சினிமா லட்சியம் என்கிறார் அவர்.

இதுகுறித்து கொட்டாச்சி கூறுகையில், நாகேஷ் நடித்த படங்களைப்பார்த்துதான் நடிகனாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டது. என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தவர் அவர்தான். குறிப்பாக, அவர் நடித்த எதிர்நீச்சல், கைநிறைய காசு, நீர்க்குமிழி என பல படங்கள் என்னை கவர்ந்தவை. அவர் நடித்த மாடிப்படி மாது கேரக்டரை யாராலும் மறந்து விட முடியாது. சிரித்துக் கொண்டே நடிப்பவர், ஒருகட்டத்தில் கண்கலங்க வைத்து விடுவார். அப்படியொரு உன்னதமான கலைஞன் நாகேஷ். திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் அவர். அவரை மாதிரியெல்லாம் நடிப்பது சாதாரண விசயமல்ல.

என்றாலும், என்னை அதிகம் பாதித்த நடிகர் என்பதால், அவரை மாதிரி ஒரு படத்திலாவது கண்கலங்க வைக்கும்படியான வேடத்தில் நடித்து விட வேண்டும் என்பதுதான் எனது சினிமா லட்சியமாகியிருக்கிறது. ஏதோ ஒன்று சாதிக்கத்தான் நான் சினிமாவில் வந்திருக்கிறேன். அப்படியில்லாமல் சினிமா என்னை இழுத்து வந்திருக்காது. அந்தவகையில், நாகேஷ் நடித்தது மாதிரியான கேரக்டர்களில் என்னை நடிக்க வைப்பதாக சில இயக்குனர்கள் கூறியிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அப்படி என்னை நடிக்க வைக்காவிட்டால், நானே ஒரு கதையை ரெடி பண்ணி அதை இயக்கி நடிப்பேன். சினிமாவில் ஏதோ ஒன்று சாதிக்காமல் நான் விடமாட்டேன் என்கிறார் காமெடியன் கொட்டாச்சி.

மூலக்கதை