மத்திய அரசு ஒப்புதல் அளித்த சட்ட வரைவு சென்னை வருகிறது: இன்று மாலைக்குள் அவசரச்சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மேலும் நேற்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தலைநகர் சென்னையில் பல இடங்களில் இருந்து மெரினாவுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக செல்கின்றனர்.முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரி நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார். இதையடுத்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஓரிரு நாளில் நடக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு நேற்றிரவு மத்திய சட்ட அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அவசர சட்ட வரைவுக்கு சிறிய திருத்தங்களுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே . கால்நடைத்துறை கூடுதல் செயலாளர் ககன் தீப்சிங் தலைமையில் அதிகாரிகள் டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்டனர். தமிழக அரசின் அவசரச்சட்ட வரைவுக்கு நேற்றிரவு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. டெல்லியிலிருந்து கொண்டு வரப்படும் சட்டச் வரைவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு ஆளுநரின் அங்கீகாரத்துக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் இருந்து சென்னை வருகிறார். மாலை 4 மணிக்கு சென்னை வரும் ஆளுநர் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்த பின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழல் உருவாக்கப்படும் என தெரிகிறது. இதனால் அனைத்து தடைகளையும் மீறி விரைவில் வாடிவாசலில் காளைகள் சீறிப் பாய்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அவசரச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஜல்லிக்கட்டு, மஞ்சுரவிரட்டு, எருதுவிடும் விழாவுக்கு மிருகவதை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது உட்பட 27 பக்கங்கள் அடங்கிய தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பாரம்பரிய காளைகள் அழியாமல் பாதுகாக்க அவசரச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. 1960ம் ஆண்டின் மிருகவதை தடை சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டு விளையாட்டு விலக்கு அளிப்பது உள்ளிட்டவைகள் அவசரச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

மூலக்கதை