வரலாறாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம்!!!

PARIS TAMIL  PARIS TAMIL
வரலாறாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம்!!!

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றோர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வரலாறாகவே மாறியது என்று கூறலாம்.
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வணிகர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் இதற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதையொட்டி, மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், பல இடங்களில் நகர பேருந்துகளின் சேவை அடியோடு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் மத்திய அரசின் உதவியுடன் அவசரச் சட்டம் ஞாயிற்றுக்கிழமைக்குள் கொண்டு வரப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதையடுத்து, போராட்டத்தை அவர் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கோரிக்கையை ஏற்க மறுப்பு: இருப்பினும், இந்த வேண்டுகோளை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. போட்டியை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
போராட்டங்கள் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதியது. இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் போராட்டங்கள் நடந்த இடங்களை நோக்கி திரண்டு சென்றனர்.
குடும்பம்-குடும்பமாக...: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் போராட்டங்களில் பெண்களும், குழந்தைகளும் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டதை காண முடிந்தது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமெனவும், பீட்டாவை தடை செய்யக் கோரியும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடந்த இடங்களை நோக்கிச் சென்றனர்.
பலரும் போராட்டக் களங்களுக்கு இரு சக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும், வேன்களிலும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு: மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மேலாக கடைகள் திறக்கப்பட்டன. மருந்தக சங்கங்களுடன் இணைக்கப்பட்டிருந்த அனைத்து மருந்தகங்களும் மூட்டப்பட்டிருந்தன. திரையரங்குகளில் காலை, மாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
பேருந்துகள் இயக்கமில்லை: போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால், சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படவில்லை. ஆட்டோக்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இதிலும், போராட்டம் நடைபெற்ற இடங்களுக்குச் சென்றவர்களே அதிகமாக இருந்தனர். கடையடைப்பு, பேருந்துகள் இயக்கமில்லாமை போன்ற காரணங்களால் பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.
அரசு பள்ளிகள் இயக்கம்: அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பள்ளிகளும் சில செயல்பட்டன. அரசு அலுவலகங்களுக்குச் சென்ற ஊழியர்கள்-பணியாளர்கள், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து வந்திருந்தனர்.
குறிப்பாக, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்புப் பட்டை அணிந்து வந்ததுடன், சென்னையில் போராட்டம் நடைபெற்று வரும் மெரீனாவை நோக்கி ஊழியர்கள் பேரணியாகச் சென்றனர்.
இன்றும் தொடரும்: இந்த நிலையில், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைக்குள் அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஓரிரு தினங்களுக்குள் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதையடுத்தே போராட்டங்கள் முடிவுக்கு வரும்.

மூலக்கதை