ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

PARIS TAMIL  PARIS TAMIL
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழக அரசு தயாரித்துள்ள ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை இரவு ஒப்புதல் வழங்கியது.
தமிழக அரசு அனுப்பி வைத்த அவசரச் சட்ட முன்வரைவு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம், கலாசாரம், சட்டம் ஆகிய துறைகள் தெரிவித்த கருத்துகள் மத்திய உள்துறையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த சட்ட முன்வரைவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் சரிபார்க்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வைக்கு அவசரச் சட்டம் தொடர்பான கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைப் படித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து, இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியதும் தமிழக ஆளுநர் பொறுப்பு வகித்து வரும் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கையெழுத்துக்காக அக்கோப்பு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மாநில விவகாரம் தொடர்புடைய ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தின் நகல் குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பி வைத்தால் போதும் என்றும் அச்சட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகமே ஒப்புதல் தெரிவிக்கலாம் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகைச் செயலகம் தரப்பில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தின் கோப்பு முறைப்படி தமிழக ஆளுநருக்கு வெள்ளிக்கிழமை இரவே அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த கோப்பில் தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை கையெழுத்திடுவார் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசு தயாரித்துள்ள ஜல்லிக்கட்டு சட்ட முன்வடிவில், ஜல்லிக்கட்டை விளையாட்டு நிகழ்வாகக் கருதி அதில் காளை பங்கேற்க ஏதுவாக விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, மதம், கலாசாரம் ஆகியவற்றை பராமரிக்க வேண்டிய மாநிலத்தின் கடமை என்பதாலும், காட்சிப்படுத்த தடை செய்யப்பட்டுள்ள விலங்குகள் பட்டியலில் உள்ள காளையை பராமரிப்பதும் பாதுகாப்பதும் மாநிலத்தின் கடமை என்றும் அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகள், விதிகள், அவற்றை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை உள்ளிட்ட விவரமும் அவசர சட்டப்பிரிவுகளில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. தமிழக ஆளுநர் கையெழுத்திட்ட பிறகு ஜல்லிக்கட்டில் காளை பங்கேற்க வகை செய்யும் அறிவிக்கையை முறைப்படி மாநில அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தில்லியில் பிரதமர் மோடியை சந்த்தித்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். பிரதமர் மோடி, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கையில் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க இயலாது என்றும் இது தொடர்பாக தமிழத்தின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம், தில்லியிலேயே தங்கி ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்யும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி சட்ட வல்லுநர்கள்-அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் அடிப்படையில், மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை ஒரு அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
வரைவு அவசரச்சட்டம் மத்திய அரசு பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தபின் அதன் அடிப்படையில் மாநில ஆளுநர் மூலம் அவசரச் சட்டம் பிறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
500 இடங்களில் போராட்டம்: 25 லட்சம் பேர் பங்கேற்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சுமார் 500 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 25 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஒரு பிரச்னையை முன்னிறுத்தி நடைபெறும் போராட்டத்தில் இவ்வளவு பேர் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. அன்று இரவு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விடுதலை செய்யக் கோரியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தை கல்லூரி மாணவர்களும்,இளைஞர்களும் நடத்த தொடங்கினர்.
பின்னர் மாநிலம் முழுவதும் போராட்டம் தொடங்கியது. பல பகுதிகளில் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

மூலக்கதை