தினமும் வெட்டப்படும் 25,000 மாடுகள்: 'பீட்டா' கண்டுகொள்ளாதது ஏன்?

தினமலர்  தினமலர்
தினமும் வெட்டப்படும் 25,000 மாடுகள்: பீட்டா கண்டுகொள்ளாதது ஏன்?

சென்னை : 'மாடுகளை துன்புறுத்துவதாக, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கூச்சலிடும், 'பீட்டா'வுக்கு, நாடு முழுவதும் தினமும், 25 ஆயிரம் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவது தெரியாதா; அவற்றை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் என்ன' என, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இளைஞர்கள் போராட்டம்:


'தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடுத்த, 'பீட்டா'வை, நாட்டை விட்டே ஓட்டும் வரை ஓயமாட்டோம்' என, இறுதிக்கட்டப் போருக்கு தயாரானது போன்று, தமிழகமே ஆர்ப்பரித்து கிளம்பி இருக்கிறது.அரசின் நிர்ப்பந்தத்தால், கல்லுாரிகளின் கதவுகள் அடைக்கப்பட்டாலும், வீட்டுக்கு செல்ல மறுத்து, வீதியில் இறங்கி, இரவு, பகலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

துன்புறுத்தல் :


'ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும்' என்பதுடன், 'பீட்டாவை இந்த மண்ணிலிருந்தே விரட்ட வேண்டும்' என்பதும் மிக முக்கிய கோரிக்கை. கடந்த, 1980ல், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்ட, பீட்டா, 'மனிதர்கள் போன்றே, விலங்குகளும் எவ்விதமான துன்புறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக வாழ வேண்டும்' என்பதே, தன் நோக்கம் என்கிறது.

இந்த அந்நிய அமைப்பின், ஆண்டு வருவாய் சராசரியாக, 300 கோடி ரூபாய்; பெரும்பாலும் நன்கொடை. இந்தியாவில், 2,000ம் ஆண்டில் நுழைந்த பீட்டா, மும்பையில் கால் பதித்தது. 'விலங்குகள் துன்புறுத்தப்படுவதை கண்டால், அரசிடமும், நீதித்துறையிடமும் முறையிட்டு தடுப்போம்' என்கிறது.

வாய் திறக்கவில்லை :


ஆனால், இதன் செயல்பாடுகளோ, அதற்கு ஏற்ப இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டால், காளைகள் துன்புறுத்தப்படுவதாக வழக்குத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது, பீட்டா அமைப்பு. ஆனால், இறைச்சிக்காக, மாடுகளை, மாநிலம் விட்டு மாநிலத்துக்கு லாரிகளில், காற்றோட்டமின்றி அடைத்து, மூச்சு முட்ட கடத்தப்படுவது பற்றியோ, தினமும், நாடு முழுவதும் இறைச்சிக்காக, 25 ஆயிரம் மாடுகள் கொல்லப்படுவதை பற்றியோ, இதுவரை வாய் திறக்கவில்லை.கேரளாவில், மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையே இயங்குகிறது. அதை பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாத பீட்டா, தமிழர்கள் பாரம்பரியத்தின் மீது கை வைத்து விளையாடுகிறது.

ரூ.300 கோடி வருவாய் :


ஜல்லிக்கட்டு நடத்தப்படும் தமிழகத்தில், மிருக வதை தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இப்படியொரு சட்டமே கிடையாது. எப்படியாவது ஜல்லிக்கட்டை ஒழித்து, நாட்டு மாடுகளை அழித்தே தீர வேண்டும் என, கங்கணம் கட்டி செயல்படும் பீட்டா, ஒன்றும் வசதியற்ற நம்மூர் சேவை அமைப்புகளை போன்றல்ல; அதன் ஆண்டு வருவாய், 300 கோடி ரூபாய்.

இந்த அமைப்பின் வருவாய் எப்படி உயர்கிறது, யார், யாரெல்லாம் இந்தியாவில் இருந்து நன்கொடை கொடுத்திருக்கின்றனர், இந்த அமைப்பு, எந்தெந்த செயலுக்கு இந்தியாவில் இந்த தொகையை செலவிட்டிருக்கிறது என, மத்திய அரசு ஆய்வு செய்தால், அதிர்ச்சி தகவலும், அந்தரங்க தொடர்பும் அம்பலத்துக்கு வரக்கூடும். காரணம், 'பல நாடுகளில் பீட்டாவின் வருவாய் குறித்து, சிறப்பு விசாரணைகள் நடந்திருக்கின்றன' என்கின்றனர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்.

மூலக்கதை