முறைகேடு புகார்களால் நடவடிக்கை : கருப்பு பண திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு வங்கிகளுக்கு தடை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் வகையில் பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டு செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்த மத்திய அரசு, இவற்றை வங்கிகளில் மாற்ற டிசம்பர் இறுதி வரை அவகாசம் அளித்தது. இதை பயன்படுத்தி கருப்பு பணத்தை மாற்ற தமிழகம் உட்பட நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வருமான வரித்துறை ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  இதற்கிடையில், கருப்பு பணத்தை ஒப்புக்கொள்ள கடைசி வாய்ப்பாக கரீப் கல்யாண் என்ற திட்டத்தை அறிவித்தது. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் டெபாசிட் செய்து, டெபாசிட் பணத்துக்கு 50% வரி செலுத்தி வழக்கு விசாரணையில் இருந்து விடுபடலாம். 25% மட்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். மீதி 25% பணம் கரீப் கல்யாண் திட்டத்தில் 4 ஆண்டுக்கு வட்டியில்லா டெபாசிட்டாக வைக்கப்படும். வரும் மார்ச் 31 வரை இத்திட்டம் அமலில் உள்ளது. செல்லாத நோட்டு மாற்றுவதில் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கரீப் கல்யாண் திட்டத்தை கூட்டுறவு வங்கிகள் செயல்படுத்த தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை சுமார் ₹300 கோடி ஒப்படைத்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை