ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : 4வது சுற்றில் கெர்பர்

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் செக் குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவுடன் நேற்று மோதிய கெர்பர் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டு 4-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கோகோ வாண்டவெகேவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். முன்னணி வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஸ்வெட்லனா கஸ்னட்சோவா, அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா), மோனா பார்தெல் (ஜெர்மனி) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.சானியா முன்னேற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டிரைகோவா (செக்.) ஜோடி 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் - ஷுவாய் ஸாங் (சீனா) ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா 3-6, 6-2, 6-2, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் விக்டர் டிராய்கியை (செர்பியா) வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் ஜோ வில்பிரைடு சோங்கா (பிரான்ஸ்), ஆண்டி மர்ரே, டேனியல் இவான்ஸ் (இங்கிலாந்து), கெய் நிஷிகோரி (ஜப்பான்), மிஸ்சா ஸ்வெரவ் (ஜெர்மனி), ஆண்ட்ரியாஸ் செப்பி (இத்தாலி) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். போபண்ணா ஏமாற்றம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - பாப்லோ கியூவஸ் (உருகுவே) ஜோடி 6-2, 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட் - பிராட்லி மவுஸ்லி இணையிடம் போராடி தோற்றது.

மூலக்கதை