இரானி கோப்பை கிரிக்கெட் குஜராத் 8 விக்கெட்டுக்கு 300 : சிராக் காந்தி அபார சதம்

தினகரன்  தினகரன்

மும்பை: இதர இந்திய அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ஜன. 20-24), ரஞ்சி சாம்பியன் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்துள்ளது. மும்பை, பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கோஹெல், பாஞ்ச்சால் களமிறங்கினர். கோஹெல் டக் அவுட்டாகி வெளியேற, பாஞ்ச்சால் 30, துருவ் ராவல் 39, கேப்டன் பார்திவ் பட்டேல் 11 ரன்னில் ஆட்டமிழந்தனர். குஜராத் அணி 82 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.இந்த நிலையில், மன்பிரீத் ஜுனேஜா - சிராக் காந்தி ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 109 ரன் சேர்த்தது. ஜுனேஜா 47 ரன், கரண் பட்டேல் 13, மோகித் தடானி 4, சிந்தன் கஜா 8 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய சிராக் சதம் விளாசினார். முதல் நாள் ஆட்ட முடிவில், குஜராத் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்துள்ளது. சிராக் காந்தி 136 ரன் (159 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்திக் பட்டேல் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை