ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் போராட்டம் - வழக்கு பணிகள் பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் போராட்டம்  வழக்கு பணிகள் பாதிப்பு

சென்னை - ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் அறப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதை வலியுறுத்தியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. பெண் வக்கீல்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேசன், லா அசோசியேசன் ஆகிய சங்கங்களும் தீர்மானங்களை நிறைவேற்றின.

இதன்படி உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றங்கள் அனைத்திலும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் சுதா, பெண் வக்கீல்கள் சங்க தலைவி நளினி, முன்னாள் தலைவி டி. பிரசன்னா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.


இதன்பிறகு ஆவின் கேட் அருகே வக்கீல்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வக்கீல்களின் நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக உயர் நீதிமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு பணிகள் பாதிக்கப்பட்டது.

.

மூலக்கதை