அதிபராக டிரம்ப் இன்று பதவியேற்பு - அமெரிக்காவை வலிமையானதாக்க சூளுரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிபராக டிரம்ப் இன்று பதவியேற்பு  அமெரிக்காவை வலிமையானதாக்க சூளுரை

வாஷிங்டன் - அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.

அவர் இன்று 45வது அதிபராக பதவியேற்கிறார். வாஷிங்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நேஷனல் மாலில் பகல் 12 மணிக்கு(இந்திய நேரப்படி இரவு 10. 30 மணி) நடக்கும் பதவியேற்பு விழாவில், டிரம்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபார்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.



தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பதவியேற்பு விழா நடக்கும் இடத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், மாகாண கவர்னர்கள், சென்ட் உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஹாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

டிரம்பின் அமைச்சரவை  உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, அதிகளவில் இந்தியவம்சாவளியினர் விழாவில் பங்கேற்கின்றனர்.

அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.

அதிபராக பதவியேற்பதற்கு முன்னதாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசுகையில், ‘‘முன்பைக் காட்டிலும் அதிக வலிமையுள்ள அமெரிக்காவை உருவாக்க நாம் பாடுபடுவோம்.

18 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய எனது அரசியல் பயணத்துக்கு மகத்தான ஆதரவு அளித்தீர்கள். உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப எனது செயல்பாடுகள் இருக்கும்.

நமக்கு மிகச்சிறந்த அமைச்சரவை அமைந்துள்ளது. அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும்’’ என்றார்.


.

மூலக்கதை