எல்லை மீள்நிர்ணய விடயம்: இ.தொ.கவும் எதிர்ப்பு; கூட்டுச்சேராதாம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
எல்லை மீள்நிர்ணய விடயம்: இ.தொ.கவும் எதிர்ப்பு; கூட்டுச்சேராதாம்

க.ஆ.கோகிலவாணி

எல்லை மீள்நிர்ணய அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ், ஏனைய சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டுச் சேராது தனித்து நின்றே செயற்படவுள்ளதாகவும் அதற்கான பலம் காங்கிரஸிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

“எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பார்க்கின்றபோது, அது சிறுபான்மையின கட்சிகளுக்கும் மக்களுக்கும் பாரிய பாதிப்பாக அமையவுள்ளது. இதற்கு காங்கிரஸ், ஒருபோதும் இணங்காது” என்று
இ.தொ.காவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். 

தம்முடன் கலந்தாலோசிக்காமல், எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான வர்த்தமானியை அச்சடிக்க வேண்டாமென, சிறுபான்மையின கட்சிகள் கோரியுள்ளன. இந்நிலையில், அவ்வறிக்கை தொடர்பில் இ.தொ.காவின் நிலைப்பாடு என்னவெனக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 

“எல்லை மீள்நிர்ணய விடயத்தில், ஏற்கெனவே இருந்த நடைமுறையை பின்பற்றுமாறே இ.தொ.கா வலியுறுத்தி
வருகின்றது. அவ்வாறு இல்லையெனில், 14
எம்.பிகளுக்கான தேர்தல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் அதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே கருதுகின்றோம். இந்நடைமுறையினால் சிறுபான்மை மக்கள்விகு சேடமாக இந்திய வம்சாவழி மக்கள் - பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.  

“இதற்கான பேச்சுவார்த்தைகள் உயர்மட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. சில வேளைகளில் மாற்றங்களை கொண்டுவரலாம். சம்பந்தப்பட்ட அமைச்சரும், எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் மாற்றங்களைக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். என்ன நடக்கின்றது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்” என்றார். 

எல்லை மீள்நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு முன்பாக, சிறுபான்மையினக் கட்சிகள் ஒன்றுகூடி, அது தொடர்பில் ஆராய வேண்டுமென புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறியுள்ளன. இக்கூட்டத்தில் இ.தொ.காவும் பங்குபற்றுமா என்று வினவியபோது, “இது தொடர்பில் என்ன செய்யலாமென்று யோசித்துக்கொண்டுள்ளோம். காங்கிரஸ் தனித்து நின்று செயற்படும். அதற்கான பலம், காங்கிரஸிடம் உள்ளது. அத்துடன், எல்லை மீள்நிர்ணயக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக, எமது கட்சியின் உயர்பீடம் அடுத்தவாரம் கூடவுள்ளது” என்றார்.

மூலக்கதை