‘மைத்திரியே மஹிந்த​வை காப்பாற்றினார்’

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
‘மைத்திரியே மஹிந்த​வை காப்பாற்றினார்’

கவிதா சுப்ரமணியம்

“யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேசத்தின் அழுத்தங்களிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காப்பாற்றினார்” என்று, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ​போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு, சர்வதேசத்தால் கிடைக்கப்பெற்ற புகழும் அங்கிகாரமுமே, முன்னாள் ஜனாதிபதியை சர்வதேச அழுத்தத்திலிருந்து பாதுகாத்தது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் செயற்பாடுகள் காரணமாகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படவிருந்த அறிக்கையும் செப்டெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றும் கூறினார்.  

“சர்வதேச நாடுகள் அனைத்தும், எமது நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதற்குத் தயாராக இருந்தன. இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர், ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடத்துவதற்குத் தீர்மானித்தார்.  

“மஹிந்தவின் சர்வதேசக் கொள்கைகளை எதிர்த்துதான் மக்கள், அவருக்கு வாக்களிக்கவில்லை எனக் கூறமுடியாது. ஆனால், சிறுபான்மையினரைக் கருத்தில் கொள்ளாமை அல்லது அவர்களுக்கான வழிவகைகளைச் செய்துக் கொடுக்காமை மற்றும் அளுத்கமை விவகாரம் போன்ற காரணங்களுக்காகவே, மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக அவர் வருவதை, மக்கள் விரும்பவில்லை என்பதே உண்மை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.  

“நாட்டுக்குச் சிறப்பான சேவையாற்றியும் ஒரு தேர்தலில் தோற்றுப்போகக்கூடிய நபராக மஹிந்த ராஜபக்ஷ இருக்கவில்லை” என்று கூறிய அவர், “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகவே 100 சதவீதம் களத்திலிருந்தேன்’ என்றார்.   

மூலக்கதை