மகுடம் சூடும் டிரம்ப் : இன்று அதிபராக பதவியேற்பு

தினமலர்  தினமலர்
மகுடம் சூடும் டிரம்ப் : இன்று அதிபராக பதவியேற்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து, அதிபர் தேர்தல் நவ., 8ல் நடந்தது. இதில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தினார். இதையடுத்து அவர் அதிபராக, இன்று பதவியேற்கிறார்.
கேபிடோல் பில்டிங்: இந்நிகழ்ச்சி, தலைநகர் வாஷிங்டன் 'கேபிடோல் பில்டிங்கில்' நடக்கிறது. இங்குதான் 'வெள்ளை மாளிகை'யும் உள்ளது. இந்த பகுதி 5 சதுர கி.மீ., அளவு கொண்டது. கட்டடத்தின் மேற்கு பகுதியில் தான், 1981ம் ஆண்டு முதல் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.விழாவில் முன்னாள் அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதிபரைத் தொடர்ந்து, துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைக் பென்ஸ், அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். இதில் பங்கேற்க 2.5 லட்சம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பின் டிரம்ப், துவக்க உரை ஆற்றுகிறார்.
அணிவகுப்பு: இதன் பின் அதிபர் மற்றும் முதல் குடிமகள் (அவரது மனைவி) ஆகியோருக்கு பென்சில்வேனியா அவென்யுவில் இருந்து 'வெள்ளை மாளிகை' வரை ராணுவ அணிவகுப்பு மரியாதை தரப்படும். இதன் பின் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவார்.
விமானத்தில்: அமெரிக்க அதிபராக 1963ல் அதிபரான லின்டன் ஜான்சன், விமானப்படை விமானத்திலேயே பதவியேற்றார்.
சிறிய பேச்சு: 1793ல் பதவியேற்ற ஜார்ஜ் வாஷிங்டன் தனது தொடக்க உரையை 135 வார்த்தைகளில் நிறைவு செய்தார். இதுவே, அதிபரின் தொடக்க உரைகளில் சிறியது.
நீண்ட பேச்சு: 1841ல் பதவியேற்ற வில்லியம் ஹென்ரி ஹாரிசன் 8,445 வார்த்தைகளில் நீண்ட உரை நிகழ்த்தினார். இதுவே நீண்ட உரை.
சொத்து எவ்வளவு: 2016ல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, டிரம்பின் சொத்து மதிப்பு 2.4 லட்சம் கோடி ரூபாய்.
குடும்பம்: டிரம்புக்கு மூன்று மனைவிகள். முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்து விட்டார். மூன்றாவது மனைவி மெலினியா டிரம்ப். இவரை 2005 ஜன., 22ல் திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு மூன்று, இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவிக்கு தலா ஒன்று என டிரம்புக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.
வயதான அதிபர்: அமெரிக்க அதிபர்களில் வயதானவர் டிரம்ப், 70, தான். இதற்கு முன் 1980ல் ரொனால்டு ரீகன், 69, (சீனியர்) அதிபராக பதவி ஏற்றார்.
முதல் அதிபர்: செனட் சபை உறுப்பினர், மாகாண கவர்னர் உள்ளிட்ட எந்த பதவியிலும் இல்லாமல் அதிபராக பதவியேற்கும் முதல் அதிபர் டிரம்ப்.
கடந்து வந்த பாதை
1946 ஜூன் 14: டொனால்ட் டிரம்ப் பிறந்தார்.1959: நியூயார்க் ராணுவ அகாடமியில் சேர்ந்தார். அங்கு உயர்கல்வியை முடித்தார்.1968: பென்சில்வேனியா பல்கலையில் பொருளாதார துறையில் பட்டம்.1971: தந்தையின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் முழு பொறுப்புகளையும் ஏற்றார்.1973: 'டிரம்ப் நிறுவனம்' என பெயர் மாற்றினார்.1980: அமெரிக்காவில் பல்வேறு சொத்துக்களை வாங்கினார்.1982: 'டிரம்ப் டவர்' திறக்கப்பட்டது.1983: நியூஜெர்சி கால்பந்து அணியை வாங்கி நடத்தினார்.1996 - 2015: அமெரிக்க அழகி போட்டியை நடத்தினார்.2001 - 2008 : ஜனநாயக கட்சியில் பணியாற்றினார்.2005: 'டிரம்ப் பல்கலை' என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கினார்.2015 ஜூன்: குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றார்.2016 மே: குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரானார்.2016 நவ., 8: அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் டிரம்ப் வெற்றி.2017 ஜன., 20: அமெரிக்காவின் 45வது அதிபராக இன்று பதவியேற்பு.
வெள்ளை மாளிகை : உலக நாடுகளின் பார்வையில் 'வெள்ளை மாளிகை'க்கு எப்போதும் தனி இடம் உண்டு. இது அமெரிக்க முதல் குடிமகனான, அதிபரின் இருப்பிடம். வாஷிங்டனில் பென்சில்வேனியா அவென்யூவில் உள்ளது. இது அயர்லாந்தின் ஜேம்ஸ் ஹோபன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. நியோகிளாசிக்கல் கட்டடக்கலையில் வெள்ளை நிறத்தில் கட்டப்பட்டுள்ளது. 1792 முதல் 1800 வரை இதன் கட்டுமானப்பணி நடந்தது. 1801ல் இருந்து அதிபர் மாளிகையாக செயல்படுகிறது. 1814 போரின் போது வெள்ளை மாளிகையின் தீயில் நாசமாகியது. பின் மறு சீரமைக்கப்பட்டது.

மூலக்கதை