ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழகத்தில் இன்று 'பந்த்?'

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழகத்தில் இன்று பந்த்?

சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர்கள் என, அனைத்து தரப்பினரும், இன்று வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கடைகள் அடைப்பு:


கடைகள் இன்று மூடப்படுவதுடன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட போக்குவரத்தும் முடங்கும் என, தெரிகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, ஆட்டோ, கால் டாக்சி, வேன்கள் ஓடாது என, சாலை போக்குவரத்து சம்மேளனம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில், 9,000 உறுப்பினர்களை கொண்ட, தனியார் பள்ளி வாகன கூட்டமைப்பு நல சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். எனவே, பள்ளி வாகனங்கள், இன்று இயங்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கமும், போராட்டத்தில் குதித்துள்ளதால், பள்ளிகள் மூடப்படும் என, அறிவித்துள்ளது.

அறிவிப்பு வரவில்லை :


தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பள்ளி வாகனங்கள் இயங்காததால், எங்கள் சங்கத்திலுள்ள பள்ளிகள் இன்று இயங்காது' என, தெரிவித்துள்ளது. ஆனால், பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு பள்ளிகள் விடுமுறை குறித்து, அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. நிலைமைக்கு ஏற்ப, கலெக்டர்கள் முடிவு செய்வர்' என, தெரிவித்துள்ளார். அதுபோல, காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கமும், 'அரசின் முடிவுப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், எங்கள் சங்கத்திலுள்ள பள்ளிகள் இயங்கும்' என, தெரிவித்துள்ளது.

சினிமா காட்சி ரத்து :


நடிகர் சங்கம் சார்பில், இன்று சென்னை, தி.நகரில் உண்ணாவிரதம் நடக்கிறது. இதனால், இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் ஓடாது :


தமிழகத்தில் உள்ள, 4.50 லட்சம் லாரிகளில், 3.50 லட்சம் லாரிகள், இன்று காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை ஓடாது. இதனால், 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடையும் என, மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தி.மு.க., ரயில் மறியல் :


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தி.முக., சார்பில், தமிழகம் முழுவதும், இன்று, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை