முதல்வருக்கே தடை போட்ட துணை சபாநாயகர்: டில்லியில் 'தில்லாலங்கடி'

தினமலர்  தினமலர்
முதல்வருக்கே தடை போட்ட துணை சபாநாயகர்: டில்லியில் தில்லாலங்கடி

''என்னைச் சந்திக்க நேரம் தராத, பிரதமர், நரேந்திர மோடியை, நீங்களும் சந்திக்க வேண்டாம்,'' என, துணை சபாநாயகர் தம்பிதுரை தடை போட்டு, இம்முறையும் முதல்வர் பன்னீர்செல்வத்தை பாடாய் படுத்தியதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வறட்சி நிவாரண நிதி கேட்டு, ஒரு வாரத்திற்கு முன், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்
பட்டிருந்தது. இந்நிலையில், வியாழனன்று சந்திக்க வரும்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டது.முதல்வர் டில்லி கிளம்புகிறார் என்ற தகவல் தெரிந்ததும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா தரப்பும் சுறுசுறுப்பாகி, ஜல்லிக்கட்டு விஷயத்திற்கு, இந்த சந்திப்பை பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் எம்.பி.,க்கள் அனைவரும் டில்லி சென்று பிரதமரை
சந்திக்க வேண்டுமென தகவல் தரப்படவே, அனைவரும் டில்லிக்கு வந்து சேர்ந்தனர்.
தல்வருக்கு மட்டுமே நேரம் தந்திருந்த பிரதமர் அலுவலகம், தம்பிதுரைக்கு நேரம் தரவில்லை. பிரதமரைச் சந்திக்க கிளம்பும் முன், தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதல்வரை,
தம்பிதுரை சந்தித்தார்.

அப்போது, பிரதமரை சந்திக்கும்போது, நானும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு, 'பிரதமர் அலுவலகம் அனுமதி தரவில்லையே' என முதல்வர் சொல்ல, ''அம்மா முதல்வராக இருந்தபோதெல்லாம் பலமுறை நானும் இருந்திருக்கிறேன். இப்போதும், நான் கூட வருகிறேன்,'' என மீண்டும் கூறியுள்ளார், தம்பிதுரை.

இதையடுத்து, மீண்டும் முயற்சி செய்தும், பிரதமர் அலுவலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த தம்பிதுரை, ''என்னை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். எனவே, நீங்களும் அவரை சந்திக்க போக வேண்டாம்; சென்னைக்கு திரும்பிவிடுங்கள்,'' என
முதல்வரை தடுத்துள்ளார்.

ஆனாலும், அனைத்தையும் மீறி, திட்டமிட்டபடி, முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர்
இல்லத்திற்கு விரைந்தார். அவருடன் தலைமைச் செயலர் உட்பட உயர் அதிகாரிகளும்
சென்றனர்.அரை மணி நேரம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 10:15 மணி
யிலிருந்து, 12:15 மணி வரை, சந்திப்பு நீடித்தது. அப்போது, வறட்சி, ஜல்லிக்கட்டு உட்பட
பல விஷயங்கள் பேசப்பட்டன.

முதல்வரும், பிரதமரும் மட்டும் தனியாக சிறிது நேரம் பேசினர். இந்த சந்திப்பு நடந்து
கொண்டிருந்தபோது, ஒட்டுமொத்த அ.தி.மு.க., - எம்.பி.,க்களும் தமிழ்நாடு இல்லத்தில்
தங்கியிருந்தனர். அங்குள்ள பெரிய ஹாலில் அமர்ந்திருந்த அவர்கள் கடும் அதிருப்தியில்
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.

இதற்கிடையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களும், துணை சபாநாயகரும் தங்களை சந்திக்க
காத்திருக்கின்றனர் என்ற விபரத்தை பிரதமரிடம் முதல்வர் தெரியப்படுத்தினார். அதற்கு
பிரதமர், ''எம்.பி.,க்களும், துணை சபாநாயகரும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை
சந்தித்து பேசும்படி கூறுங்கள்,'' எனக் கூறினார்.

இந்த தகவல், தமிழ்நாடு இல்லத்தில் எம்.பி.,க்களுடன் காத்திருந்த தம்பிதுரைக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு உஷ்ணமான தம்பிதுரை, ''அவரை பார்க்கத்தான் நேரம் வேண்டும். நான் யாரைப் பார்க்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ய வேண்டாம்,'' என்றார்.மேலும், தனக்கு நேரம் தர மறுத்த பிரதமரை, சக, எம்.பி.,க்கள் மத்தியிலேயே, கடுமையாக தம்பிதுரை
விமர்சனம் செய்ததாக தெரிகிறது. பின், முதல்வர் வந்து சேரவே, தமிழ்நாடு இல்லத்திலிருந்து, தம்பிதுரை கிளம்பிச் சென்றுவிட்டார்.

தங்களை பிரதமரை சந்திக்க அழைத்துச் செல்வார் என, காலை முதல் அவருடனேயே
காத்திருந்த அனைத்து, எம்.பி.,க்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்தது.அடுத்து என்ன செய்வது என்பது குறித்துகூட அவர்களுக்கு யாரும் வழிகாட்ட இயலாத நிலை காணப்பட்டது. பின், மேல்மாடிக்கு சென்று முதல்வரை சில நிமிடங்கள் சந்தித்துவிட்டு, அனைவரும் கிளம்பிச் சென்றனர்.

'நன்மையே யாவும் நன்மையாய் முடியும்'

பிரதமருடனான சந்திப்புக்கு பின், நிருபர்களிடம், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறிய
தாவது:வறட்சி நிவாரண நிதியாக, 30 ஆயிரத்து, 565 கோடி ரூபாய் ஒதுக்கும்படி பிரதமரிடம் கோரினேன். ஜல்லிக்கட்டு பிரச்னை குறித்தும் கூறினேன். 'தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன். விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இவ்விஷயத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுத்தால், அதற்கு, மத்திய அரசு உறுதுணையாக நிற்கும்' என, பிரதமர் தெரிவித்தார்.

நல்லதே நடக்கும்; எல்லாம் நன்மையாய் முடியும். ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் மீது தடியடி நடந்ததாக தெரியவில்லை. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

எம்.பி.,க்கள் கொதிப்பு!


தமிழ்நாடு இல்ல ஹாலில் அமர்ந்திருந்த, எம்.பி.,க்கள், தம்பிதுரைக்கு எதிராக, நேருக்கு
நேராகவே கொந்தளித்து விட்டனர். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கூறுகையில், 'தனிப்பட்ட
தம்பிதுரையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், பிரதமரை சந்திக்க வேண்டுமெனில்,
பார்லிமென்ட் கட்சித் தலைவர் தானே, நேரம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

அதை விடுத்து, துணை சபாநாயகராக இருந்து கொண்டு, உங்களது லெட்டர்ஹெட்டிலேயே ஏன் பிரதமரிடம் நேரம் கேட்கிறீர்கள்?' என்றனர். மேலும், 'பிரதமரை சந்திக்கப் போவதாக கூறி டில்லிக்கு வரவழைத்து, சாலையில் நிற்க வைத்து, அவமானப்படுத்துகிறீர்கள். இரண்டு ஆண்டாக, இதுதான் நடக்கிறது' என, எம்.பி.,க்கள் கடுமையாக பேசினர்.

டிக்கெட் ரத்து


முதல்வர், தன் பயணத்தை முடித்துக், நேற்று பிற்பகல், 12:30 மணி விமானம் மூலம் சென்னை திரும்புவதாக இருந்தது. பின், 4:00 மணிக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டது. அதுவும் ரத்தாகி, இரவு, 8:00 மணிக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டது. பின், சென்னையிலிருந்து வந்த தகவலை அடுத்து, அதுவும் ரத்தாகி, இரவு, டில்லியிலேயே முதல்வர் தங்கிவிட்டார்.

- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை