ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னாள் நம்பர்-1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ‘வைல்டுகார்டு’ மூலம் தகுதி பெற்ற உஸ்பெகிஸ்தானின் டேனிஸ் இஸ்தோமினிடம் 2வது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனையான ரத்வன்ஸ்காவும் வெளியேறினார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில், 2ம் சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் 2ம் நிலை வீரரான ஜோகோவிச், ‘வைல்டுகார்டு’ மூலம் தகுதி பெற்ற உலகின் 117ம் நிலை வீரரான டேனிஸ் இஸ்தோமினை எதிர்த்து விளையாடினார். 4 மணி நேரம் 49 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் ஜோகோவிச் 6-7, 7-5, 6-2, 6-7, 4-6 என்ற 5 செட்களாக போராடி, அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தார். ஆஸி. ஓபன் வரலாற்றில் இது மிகப்பெரும் அதிர்ச்சித் தோல்வியாகும். 6 முறை ஆஸி. ஓபன் பட்டம், 12 கிராண்ட் ஸ்லாம் பட்டம், 67 சர்வதேச தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சை வீழ்த்திய இஸ்தோமின் இதுவரை ஒரே ஒரு தொடரில் மட்டுமே கோப்பை வென்றவார். ஆஸி. ஓபனில் 3வது சுற்றுக்கு முன்னேறியதே இவரது சிறப்பான செயல்படாகும். 122 வாரங்களாக நம்பர்-1 வீரராக இருந்த ஜோகோவிச், கடந்த நவம்பரில் அந்த இடத்தை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் நடால் 6-3, 6-1, 6-3 என்ற செட்களில் சைப்ரசின் பாக்தாதிசை வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.மகளிர் பிரிவில், உலகின் 3ம் நிலை வீராங்கனையான போலந்தின் ரத்வன்ஸ்கா 3-6, 2-6 என்ற நேர் செட்களில் 35 வயது மூத்த வீராங்கனையான குரோஷியாவின் மிர்ஜானா லூசிக் பரோனியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற செட்களில் செக் குடியரசின் ஷபரோவாவையும், பிரிட்டனின் கோன்டா 6-4, 6-2 என்ற செட்களில் ஜப்பானின் ஒசாகாவையும், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி 6-1, 6-3 என்ற செட்களில் குரோஷியாவின் வெகிக்கையும் வென்று 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.பயஸ் ஜோடி ஏமாற்றம்ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரேசிலின் ஆந்த்ரே ஷா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தது. அதே போல, மற்றொரு இந்திய ஜோடியான புரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடியும் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்தது.

மூலக்கதை