அதிபர் பதவியில் இருந்து விடை பெற்றார் ஒபாமா: போனில் மோடிக்கு நன்றி

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து பராக் ஒபாமா நேற்று விடை பெற்றார். அவர், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இருநாட்டு உறவை மேம்படுத்த உதவியதற்காக நன்றி தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் இன்று பதவி ஏற்கிறார். இதையடுத்து ஏற்கனவே இப்பதவியில் இருந்த ஒபாமா, நேற்று விடை பெற்றார். இதையொட்டி அவர் கடைசியாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றை அவர் விளக்கி கூறினார். இதைத் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து தாம் விடைபெறுவதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே, ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று தொலைபேசியில்a அழைத்து பேசி நன்றி தெரிவித்தார். இந்தியா - அமெரிக்கா உறவை வலுவானதாக மாற்றவும், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கையில் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்ததற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.மேலும் 2015ம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைத்து, பிரமாண்ட வரவேற்பு அளித்ததையும் நினைவு கூர்ந்த ஒபாமா, வரும் 26ம் தேதி வர இருக்கும் 68வது குடியரசு தின விழாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது ஒபாமாவிடம் பேசிய மோடி, அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்தார். இதற்கிடையே ஒபாமா மனைவி மிச்செலி கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்த வெள்ளை மாளிகை முழுவதையும் தனது செல்ல நாய்களுடன் கடைசியாக ஒருமுறை சுற்றிப்பார்த்து ரசித்தார். அதிபர் பதவியில் இருந்து ஒபாமா விலகியதும் இன்றே அவர்கள் வேறு இல்லத்திற்கு செல்ல உள்ளனர். இந்த நிலையில் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள டிரம்ப்பின் மகள் இவாங்கா நேற்று மிச்செலியை ஒருமணிநேரம் நேரில் சந்தித்து பேசினார். அப்போது வெள்ளை மாளிகையில் முதல் குடிமகள் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறையை கேட்டு அறிந்தார். முன்னேறிய மோடி: இதுவரை சமூக இணையதளங்களான பேஸ்புக், டிவிட்டர், யூடியூப், கூகுள் பிளஸ் உள்ளிட்டவற்றுள், உலகத் தலைவர்களில் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவுக்குத்தான் அதிகம் பேர் பாலோயர்களாக இருந்தனர். ஒபாமா நேற்று பதவியில் இருந்து விடைபெற்றதை தொடர்ந்து, முதல் இடத்தை பிரதமர் மோடி பிடித்துள்ளார்.விக்கிலீக்ஸ் செல்சியாவின் தண்டணை குறைப்பு சரிதான்2010ல் விக்கி லீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அப்போது விக்கி லீக்சுக்கு ரகசிய ஆவணங்களை திருடி வழங்கியதாக திருநங்கை செல்சியா மேன்னிங் (29) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2013ல் அவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது தண்டனையை ஒபாமா குறைத்தார். இதையடுத்து வரும் மே மாதம் 17ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். இது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், தனது முடிவு சரியானதுதான் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை