வீட்டுக்கு வீடு பொங்கல் கொண்டாட்டம்... இப்படிதான் இருக்கணும்! தெருக்களில் கரைபுரண்டோடிய உற்சாகம்

தினமலர்  தினமலர்
வீட்டுக்கு வீடு பொங்கல் கொண்டாட்டம்... இப்படிதான் இருக்கணும்! தெருக்களில் கரைபுரண்டோடிய உற்சாகம்

திருப்பூர் : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, திருப்பூர் பகுதிகளில், பாரம்பரிய உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. வீடுகள் முன் வண்ண கோலம், வீதிகளில் விளையாட்டு என்று, உற்சாக பெருக்குடன் பொங்கல் விழா நடைபெற்றது. இன்று, மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இயற்கைக்கும், உழவுக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக, தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாடப்படுகிறது. தீயவற்றை அழித்து, நல்லெண்ணத்தோடு பொங்கல் கொண்டாடும் வகையில், போகி பண்டிகை, காப்பு கட்டுதல் விழா நடந்தது. இயற்கை சுழற்சிக்கு ஆதாரமாக உள்ள ஆதவனுக்கு நன்றி சொல்லும் வகையில், நேற்று சூரியன் பொங்கல் கொண்டாடப்பட்டது.வீடுகளை அலங்கரித்து, புத்தாடை அணிந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். வீடுகளுக்கு முன்பு மாக்கோலமும், பல நிற பொடிகள் கொண்ட வண்ண கோலங்கள் இட்டு, புதிய அடுப்பு, புதிய பானையில் பொங்கல் வைத்தனர்.மஞ்சள் கொத்து கட்டி, கரும்பு வைத்து, வாழை இலையில் படையலிட்டு, சூரியனை வழிபட்டனர். பொங்கல் பொங்கும் போது, பெரியவர் முதல் சிறியவர் வரை "பொங்கலோ பொங்கல்' என்று குதூகலித்தனர். திருப்பூர் நகரின் வீதிகள் பலவும், வண்ண கோலங்களாக காட்சியளித்தன. வணிக நிறுவனங்கள், பனியன் கம்பெனிகளிலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.கோவில்களில், நேற்று அதிகாலையில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், புது வஸ்திரங்கள் அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் பொங்கலிட்டு மகிழ்ந்த மக்கள், கோவில்களுக்கு வந்து சுவாமியை வழிபட்டனர். திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.மாட்டு பொங்கல்மாட்டு பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் கொண்டாடப்படும் பிரதான பொங்கலாக, பட்டி பொங்கல் உள்ளது. உழவு கருவிகள், மாடுகள் இருக்கும் பட்டிகளில் கொண்டாடு வகையில், கால்நடைகளை குளிப்பாட்டி, மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசி, மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.பூப்பறித்தல்நீர்நிலைகளுக்கு நன்றி சொல்லும் விழாவாகவும், ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும், மூன்றாம் நாளான, நாளை காணும் பொங்கல் விழா நடக்கிறது. கிராம பகுதிகளில், பெண்கள் ஆவாரம் பூ பறித்து வந்து, கிணறு, ஆறு, குளம், குட்டை <உள்ளிட்ட நீர் நிலைகளில் விட்டு, பூப்பறிக்கும் நோன்பு கொண்டாடுவர்.

மூலக்கதை