உலக வங்கியிடம் கேட்கிறது தமிழக அரசு... வருமா நிதி; மாறுமா கோவையின் தலைவிதி? உதவினால் திட்டங்கள் வருவதற்கு வாய்ப்பு!

தினமலர்  தினமலர்
உலக வங்கியிடம் கேட்கிறது தமிழக அரசு... வருமா நிதி; மாறுமா கோவையின் தலைவிதி? உதவினால் திட்டங்கள் வருவதற்கு வாய்ப்பு!

கோவை மாநகர மேம்பாட்டுக்கான திட்டங்கள் உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கான திட்டங்களுக்கு உலக வங்கியிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது; அது கிடைத்தால் மட்டுமே, இந்த திட்டங்கள் துவங்கும் வாய்ப்புள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, கோவை நகருக்கென, 2,378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அன்றைய முதல்வர் ஜெ., அறிவித்தார்; அவற்றில், ஆக்கிரமிப்பு வீடுகளுக்கான மாற்று வீடுகள் கட்டும் திட்டத்தைத் தவிர, வேறு எந்தத் திட்டமும் துவக்கப்படவில்லை; அதேபோல, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவைக்கு தர வேண்டிய, 200 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு தந்துவிட்டது; தமிழக அரசின் நிதி, 200 கோடி ரூபாய் வரவில்லை.இந்த திட்டங்கள் அனைத்துக்குமே, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்புதலும் கிடைத்து விட்டது. பல திட்டங்கள், டெண்டர் நிலையில் உள்ளன. ஆனால், தமிழக அரசின் நிதித்துறையிடம் சென்று கோப்புகள் தேங்கி விடுகின்றன. நிதி இல்லாததே, இந்த திட்டங்கள் முடங்குவதற்கான காரணமாகவுள்ளது. இதன் காரணமாக, கோவையிலுள்ள அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மக்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.வேறு வழியின்றி, ஏதாவது ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லி, காலத்தைத் தள்ளி வருகின்றனர். உண்மையில், நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணமென்பதையும் இவர்களால் சொல்ல முடிவதில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில், மாநகராட்சியின் நிதி நிலைமையும் படுமோசமாகவுள்ளது. தமிழக அரசிலும் நிர்வாகச் சீர்கேடு, நிதிப் பற்றாக்குறை என நல்ல சூழ்நிலை இருப்பதாகத் தெரியவில்லை.அதனால், இந்த திட்டங்கள் அனைத்தும் கனவாகவே கலைந்து விடுமோ என்று, கோவை மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது.
நிதிக்கு உத்தரவாதம் இல்லை!இந்நிலையில், இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதியை, உலக வங்கியிடம் கோரி இருப்பதாக, மாநகராட்சி வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. கோவைக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்த, இந்த நிதியை தமிழக அரசு கோரவுள்ளது.ஒருவேளை அந்த நிதி கிடைக்கும்பட்சத்தில், கோவைக்கு முன்னுரிமை கொடுக்க அரசு முடிவு செய்திருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், இது தொடர்பாக எந்த உத்தரவாதமான தகவலையும் தமிழக அரசு உயரதிகாரிகள் தருவதாக இல்லை. அதனால், உலக வங்கி கை கொடுத்து, நிதியை ஒதுக்கினால் மட்டுமே, கோவைக்கான திட்டங்கள் வருமென்பது உறுதியாகி விட்டது.


வெறும் கையில் முழம்போடும் மக்கள் பிரதிநிதிகள்!ஒரு வேளை, நிதி கிடைக்காதபட்சத்தில், இந்த ஆட்சிக்காலத்திலும் இத்திட்டம் எதுவும் நிறைவேற்றப்படாது என்பதும் ஏறத்தாழ நிச்சயமாகி விட்டது. நிதியே இல்லாமல், வெறும் கையில் முழம்போட்டு, கோவை மக்களை ஏமாற்றி, ஜெயித்த மக்கள் பிரதிநிதிகள், அப்போதும் ஏதாவது ஒரு பதிலை வைத்திருப்பர். அதையும் நம்பி, இதே மக்கள் மீண்டும் ஓட்டளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-நமது நிருபர்-

மூலக்கதை