மகர சங்கராந்தி விருந்துக்கு பா.ஜ தலைவர்களுக்கு நிதிஷ் திடீர் அழைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகர சங்கராந்தி விருந்துக்கு பா.ஜ தலைவர்களுக்கு நிதிஷ் திடீர் அழைப்பு

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மகர சங்கராந்தி விருந்துக்கு பாஜ தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகாரில் கடந்த முறை, முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்றது. பாஜவில் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதற்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 2013ம் ஆண்டில் பாஜவை விட்டு பிரிந்த நிதிஷ்குமார், சட்டசபை தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார்.

இதில் மீண்டும் வெற்றி பெற்று முதல்வரானார். தற்போது அவரது தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சமீப காலமாக பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் நெருக்கம் காட்டி வருகிறார்.

இது ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை அழைத்து, குரு கோபிந்த்  சிங்கின் 350வது பிறந்த நாள் விழாவை பிரமாண்டமாக நடத்தினார் நிதிஷ்.

அந்த விழாவில் அவரை பிரதமர் பாராட்டினார். பதிலுக்கு நிதிஷும் அவரை பாராட்டினார்.



 இந்நிலையில், ககாரியா மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதிஷ்குமார் பேசுகையில், ‘‘பீகாரில் மது விலக்கை அமல்படுத்தியதற்காக பாராட்டு தெரிவித்த பிரதமர்  மோடிக்கு நன்றி. முதல்வராக பதவி வகித்த 12 ஆண்டுகளில் குஜராத்தில் முழு மது  விலக்கை அவர் அமல்படுத்தியதை பாராட்டுகிறேன்.

அதே போல், நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்துவதற்குரிய சூழலை மோடி  ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாஜ ஆளும் மாநிலங்களில் முழு மது  விலக்கை அமல்படுத்த அவர் உத்தரவிட வேண்டும்’’ என்றார் நிதிஷ் குமார்.

இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் வரும் 15ம் தேதி மகர சங்கராந்தி விழா நடத்தப்படுகிறது.

இதில் அளிக்கப்படும் விருந்துக்கு வருமாறு மாநில பாஜ தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கமாக, கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பும் இக்கட்சி, இந்த முறை எதிர்க்கட்சியான பாஜவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது, லாலு கட்சிக்கும், காங்கிரசுக்கும் மேலும் எரிச்சல் ஊட்டியுள்ளது.


.

மூலக்கதை