சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம்...

தினத்தந்தி  தினத்தந்தி
சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம்...

ஆலந்தூர்,

சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ரூ.5 லட்சத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சோதனை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 40) என்பவர் வந்தார். அவரது நடவடிக்கையில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரது கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

வெளிநாட்டு பணம் பறிமுதல்

அதில் துணிகளுக்கு இடையே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் செல்வதற்காக வந்த கிருஷ்ணகுமாரின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். பின்னர் அவரிடம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து அனுப்பியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் தற்கொலை

* வியாசர்பாடியை சேர்ந்தவர் வினோத்குமார் (30). கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த அவர் ஆவடி அருகே மோரை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

* கிண்டி கத்திப்பாரா மேம்பால தடுப்புச்சுவரில் முட்டை ஏற்றிச்சென்ற லாரி மோதி கவிழ்ந்ததில் 37 ஆயிரம் முட்டைகள் உடைந்தன. லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி லேசான காயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி மனைவி சுபா (27) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

* குடிப்பழக்கம் காரணமாக எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பெயிண்டர் அப்புதினேஷ் (18) தூக்குப்போட்டு இறந்தார்.

தவறி விழுந்து சாவு

* வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வீரமணி (54), புழல் லட்சுமிபுரம் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 2–வது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.

* கடந்த 5–ந்தேதி மின்சார ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் தபன்மண்டல் (34), நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

* அம்பத்தூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த எழும்பூரை சேர்ந்த முகில் ரஞ்சித் (26) வேன் மோதி பலியானார்.

* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மாணவ–மாணவிகள் யாரும் வகுப்புக்குள் தின்பண்டங்கள் கொண்டு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

* மாம்பலம்–சைதாப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மின்சார ரெயில் மோதி பலியானார்.

* திருவல்லிக்கேணி வெங்கடேசபுரத்தில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார்சைக்கிள்களை மர்மநபர்கள் தீ வைத்து எரித்துவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை