சென்னை தியாகராயநகரில் நடைபாதை கடைகளை அகற்ற 8 வாரங்களுக்கு தடை சுப்ரீம் கோர்ட்டு ...

தினத்தந்தி  தினத்தந்தி
சென்னை தியாகராயநகரில் நடைபாதை கடைகளை அகற்ற 8 வாரங்களுக்கு தடை சுப்ரீம் கோர்ட்டு ...

புதுடெல்லி,

நடைபாதை கடைகளை அகற்றும் பிரச்சினை தொடர்பாக சென்னை தியாகராயநகர் ராமநாதன் தெரு உஸ்மான் சாலை கிழக்கு பகுதி சிறு வியாபாரிகள் சங்கத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டதாக கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு முன்பு சங்கத்தின் சார்பில் மூத்த வக்கீல் வி.மோகனா, வக்கீல் பிரபு ராமசுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மீறி கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக தடை விதிக்க வேண்டும் என்றும் முறையீடு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் ஒரு வாரத்துக்குள் ஏற்கனவே அமைக்கப்பட்ட நகர வியாபாரிகள் குழுவிடம் கோரிக்கை மனுவை அளிக்க வேண்டும். நகர வியாபாரிகள் குழுவினர் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தின் அடிப்படையில் ஆறு வாரங்களுக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும். அப்புறப்படுத்தப்படாத கடைகள் எவற்றையும் 8 வாரங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது’’ என்று உத்தரவிட்டனர்.

மூலக்கதை