கீழடி’ அகழ்வாராய்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் வைகோ கோரிக்கையை மத்திய மந்திரி...

தினத்தந்தி  தினத்தந்தி
கீழடி’ அகழ்வாராய்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் வைகோ கோரிக்கையை மத்திய மந்திரி...

சென்னை,

இதுகுறித்து ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சாஸ்திரி பவனில் மத்திய அரசின் சுற்றுலா கலாசாரத்துறை மந்திரி மகேஷ் சர்மாவை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று சந்தித்தார். அப்போது ஒரு கோரிக்கை மனுவை வைகோ அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

‘கீழடி’யில் ஆய்வு


‘வைகை’ ஆற்றங்கரையில் மதுரை மாநகருக்கு அருகாமையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ‘கீழடி’ கிராம எல்லையில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதில், உலகெங்கிலும் உள்ள தொல்லியல் நிபுணர்கள் திகைத்து வியக்க வைக்கும் எண்ணற்ற ஆதாரங்கள் கிடைத்தன.

2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் வைகை நதிக்கரையில் பழமையான தமிழ் நகரம் அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

‘கீழடி’யில் 2015-ம் ஆண்டு அகழ்வாய்வு நடந்தபோது மண் பானைகள், இரும்பு கருவிகள், முத்துக்கள், பளிங்குக்கற்கள் உள்ளிட்ட பல பொரு ட்கள் கண்டறியப்பட்டன. பல பொரு ட்களில் சங்க காலத்து தமிழர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

‘இந்தப் பகுதியில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழ்வு நடத்தப்பட்டால் பண்டைய நாகரிக அடையாளங்கள் பலவற்றை கண்டுபிடிக்க இயலும்’, என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொல்லியல் பரப்பாய்வு துறை அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணா என்பவர் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டார்.

பழந்தமிழர் நாகரிகம்


தற்போது அகழ்வாய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால், அகழ்வு செய்யப்பட்ட பகுதிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளன. ‘கீழடி’ பகுதியில் பூமிக்கு அடியில் பழந்தமிழர் நாகரிகத்தின் சாட்சியங்கள் இருப்பதை ‘கீழடி’ உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கண்டுபிடித்தார்.

‘கீழடி’ அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர் வாழ்விடங்களில் செங்கல் கட்டிடங்கள், வட்ட கிணறுகள், நீண்ட சதுர குளங்கள் மற்றும் வாள்கள், கோடரிகள், மண்வெட்டிகள், கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவை உலோக காலத்தைச் சேர்ந்தவை என அறியப்பட்டது.

இரட்டைச் சுவர்கள் உலைக்களம் இருந்துள்ளது. செங்கல் காளவாய் இருந்துள்ளது. மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால், கழிவு நீர் சாக்கடை போக்கும் வடிகால்கள் அமைந்திருந்தன.

ஆலோசனை கூட்டம்


உலகத்தின் மிகப் பழமையான நாகரிகம் தமிழ்நாட்டில் திகழ்ந்ததற்கு பூமிக்கடியில் நதிக்கரைகளில் அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு இந்திய தொல்லியல் பரப்பாய்வுத் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியே இதில் மிகுந்த அக்கறையோடு இருப்பதை கருத்தில் கொண்டு, மத்திய மந்திரியாக நீங்கள் தமிழர்களின் கலாசார தலைநகரமாகிய மதுரை மாநகரில், இந்திய தொல்லியல் துறையின் அதிகாரிகளும், தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்ளும் விதத்தில் ஒரு கூட்டத்தை உங்கள் தலைமையில் நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் வைகோ கூறியிருந்தார்.

ஏற்பாடு செய்வதாக...


இந்த கோரிக்கை மனுவை மத்திய மந்திரி மகேஷ் சர்மா உடனடியாக ஏற்றுக்கொண்டார். அந்த கோரிக்கை மனுவிலேயே, ‘பாராளுமன்ற ‘பட்ஜெட்’ கூட்டத்தொடர் முடிந்தபின், மத்திய-மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு நானே ஏற்பாடு செய்கிறேன்’, என்று குறிப்பு எழுதி தந்தார். மேலும் இத்தகைய கோரிக்கை மனுவுக்காக வைகோவுக்கு நன்றியும் தெரிவித்தார்.

30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று வைகோ குறிப்பிட்டு உள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மூலக்கதை