ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஜி.கே.வாசன்...

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஜி.கே.வாசன்...

சென்னை,

கவன ஈர்ப்பு கூட்டம்

வறட்சியால் வாடும் தமிழகம், வறுமையில் மடியும் விவசாயிகள் என்ற தலைப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் வரவேற்புரையாற்றினார். இதில் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், கவிஞர்கள் பிறைசூடன், கங்கை மணிமாறன், ரவிபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் குடும்பங்கள் 10 பேருக்கு பொங்கல் பொருட்களை ஜி.கே.வாசன் வழங்கினார். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அவசர சட்டம்


மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரி ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசி இருப்பதை பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு சட்டப்பணிகளை முழுமையாக செய்திருக்கிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான மத்திய அரசின் பணிகள் குறித்து கூற தவறியது மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டு மீது பழிபோடுவது தமிழக மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வைத்த செய்தியாக இருக்கிறது. எனவே எஞ்சியுள்ள 2 நாட்களில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து தமிழக மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.

என்ன நடவடிக்கை?


ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பா.ஜ.க.. கடந்த 2½ ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறார்கள். தமிழக மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஆக்கப்பூர்வமான முறையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்?.

அவர்கள் பிறகட்சிகளை குறைகூறுவது ஏற்புடையதல்ல. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்யவில்லை என்றால் மக்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை