ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி பேச்சு

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி பேச்சு

சென்னை,

பொங்கல் பண்டிகை

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆர்.சுதா, பொருளாளர் எஸ்.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், மூத்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.ஜெயசந்திரன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பேசும்போது, ‘ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில கலாசாரத்துக்கு ஏற்ப புத்தாண்டை வரவேற்கிறார்கள். ஒவ்வொரு புத்தாண்டையும், தமிழர்கள் பாரம்பரிய கலாசார விழாவான பொங்கல் பண்டிகையோடு வரவேற்கின்றனர். ஆனால், தற்போது தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விவசாய பெருமக்களுக்கு சிறப்பாக இருக்காது. எனவே, வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு வக்கீல்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

ஜல்லிக்கட்டு


மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பேசும்போது, ‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டி என்பது பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து வந்துள்ளது. இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் சில கொடுமைப்படுத்தப்படுவதால், அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது’ என்று பேசினார்.

முன்னதாக சங்கத்தின் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்றார். நூலகர் ஜி.ராஜேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மூத்த செயற்குழு உறுப்பினர்கள் வி.நன்மாறன், டி.ஆர்.தாரா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். 

மூலக்கதை