கிரானைட் முறைகேடு வழக்கில் மத்திய சுரங்கத்துறை பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு...

தினத்தந்தி  தினத்தந்தி
கிரானைட் முறைகேடு வழக்கில் மத்திய சுரங்கத்துறை பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு...

சென்னை,

கிரானைட் முறைகேடு


சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல வழக்கில், ‘மதுரையில் சட்டவிரோதமாக செயல்படும் கிரானைட் குவாரிகளினால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி விசாரணை நடத்திய அதிகாரி சகாயம் 2015-ம் ஆண்டு ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் ‘ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து முறைகேட்டுக்கு உதவிய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்து இருந்தார்.

கூட்டமைப்பு மனு


இந்த பரிந்துரைகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது.

அதேபோல, இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பதில் அளிக்க வேண்டும்

அந்த மனுவில், ‘கடந்த 17 ஆண்டுகளில் கிரானைட் குவாரிகள் மூலம் ரூ.52 ஆயிரம் கோடி தான் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அதனால் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழு கிரானைட் குவாரிகளால் பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது தவறானது. இந்த வழக்கில் மத்திய அரசின் மேலும் சில துறைகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து ஆய்வு நடத்தினால் தான் உண்மையான மதிப்பீடு என்ன என்பது தெரியும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கில், ‘மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை, மண்ணியல் துறை, சுரங்கத்துறை, தேசிய பல்லுயிர் ஆணையம், விலங்கியல் ஆய்வுத்துறை ஆகிய துறைகளை எதிர்மனுதாரர்களாக நீதிபதிகள் சேர்த்தனர். அந்த துறைகளின் செயலாளர்கள் இந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மூலக்கதை