‘பொங்கல் பண்டிகையை கொண்டாடப்போவதில்லை’ திருமாவளவன் அறிக்கை

தினத்தந்தி  தினத்தந்தி
‘பொங்கல் பண்டிகையை கொண்டாடப்போவதில்லை’ திருமாவளவன் அறிக்கை

சென்னை,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பொங்கல் பண்டிகை


தமிழகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் தமிழக அரசு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், விளைச்சல் பாதிப்புக்கு ஏக்கருக்கு தலா ரூ.5,700–ம் இழப்பீடு வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சமும், ஏக்கருக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை அரசு புறந்தள்ளியிருப்பது வேதனை அளிக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமும் தற்போது வறட்சியால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது. இந்நிலையில், உழைக்கும் மக்களின் இந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

துணைவேந்தர் பதவி


திருமாவளவன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘தமிழகத்தில் 24 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் துணைவேந்தர் பதவிகள் மற்றும் சில முதன்மை அதிகாரமுள்ள பதவிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. தற்போது, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவிகள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளன. தற்போது மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நியமனம் செய்வதற்கு தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது அரசியல் தலையீடு இல்லாமல் சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் தலித் சமூகத்தைச சார்ந்தவர்களுக்கும் துணை வேந்தர் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் அளித்திட தேர்வுக்குழுவும், தமிழக அரசும், கவர்னரும் முன்வரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.


மூலக்கதை