ரூ.10 நாணயத்தை வாங்க கண்டக்டர்கள்... மறுப்பு பஸ்களில் புதிய பிரச்னை உருவெடுக்கிறது

தினமலர்  தினமலர்
ரூ.10 நாணயத்தை வாங்க கண்டக்டர்கள்... மறுப்பு பஸ்களில் புதிய பிரச்னை உருவெடுக்கிறது

கடலுார் : தனியார் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என கண்டக்டர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி உயர் மதிப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதைத்தொடர்ந்து பொது மக்கள் வங்கியில் பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளும் கெடுவும் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இந்த சூழ்நிலையில் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. பணத் தட்டுப்பாடு காரணமாக மக்களுக்கு தேவையான பணத்தை வங்கிகளும் இதுவரை கொடுக்கவில்லை. மத்திய ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு போதுமான பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.மேலும் மத்திய ரிசர்வ் வங்கி முதல் கட்டமாக செல்லாத ரூபாய் நோட்டுக்கு மாற்றாக 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வெளியிட்டது. இதனால் கடும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் சில்லைரைமக்கள் கடும் அவதிப்பட்டனர்.வங்கிகளே பயன்படுத்த முடியாமல் சேமித்து வைத்திருந்த கிழிந்த நோட்டுகளை மீண்டும் எடுத்து பயன்படுத்தினர். குறிப்பாக 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுக்கள் மிகவும் பழுதடைந்த நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் வழங்கினர். சில்லரை தட்டுப்பாட்டால் புதிய 10 ரூபாய் நாணயங்களையும் வங்கிகள் அதிகளவில் புழக்கத்தில் விட்டன. இந்நிலையில் தற்போது தனியார் மற்றும் அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் கண்டக்டர்கள் அதை வாங்க மறுத்து, இது செல்லாது என்று ஒரே வார்த்தையில் பதில் கூறுகின்றனர். இதனால், நடத்துனர்களுக்கும், பயணிகளுக்கும் கடும் மோதல் வெடித்து வருகிறது. இது குறித்து அரசு பஸ் கண்டக்டர்கள் கூறுகையில், 'பொது மக்களிடம் அதிகளவில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருக்கிறது. இதை வாங்கிச் சென்றால் எங்களிடமிருந்து டெப்போவில் வாங்க மறுக்கின்றனர். டெப்போவில் இருந்து வங்கியில் செலுத்த கொண்டு செல்லும்போது, வங்கியாளர்கள், நாங்கள் தான் சில்லறை தட்டுப்பாட்டிற்காக 10 ரூபாய் நாணயம் வழங்கி வருகிறோம். அதை ஏன் நீங்கள் திரும்பவும் எங்களிடமே கொடுக்கிறீர்கள். இந்த நாணயத்தை எண்ணிக்கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டுமா? என வங்கிகளில் வாங்க மறுப்பதால், எங்களிடம், 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டாம் என கூறுகின்றனர். அப்படியே ஒரு சிலர் கொடுக்கும் நாணயங்களை வாங்கிச் சென்றால், எங்களிடம் வாங்க மறுத்து திருப்பிக் கொடுத்து விடுகின்றனர். இதனால், அந்த பணத்தை நாங்கள் முதல் போடும் நிலை ஏற்படுகிறது' என்றனர்.இதுவரை மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்நிலையில் அரசு விதிக்குட்பட்டு இயக்கி வரும் தனியார் மற்றும் அரசு பஸ் கண்டக்டர்கள் தன் மனம்போன போக்கில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என கூறுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. எனவே, பயணிகள் படும் அவஸ்தையை கருத்தில் கொண்டு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்டிப்பாக வாங்க வேண்டும்...இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க கடலுார் மாவட்டச் செயலர் தேசிங்குராஜன் கூறுகையில், 'பயணிகளிடம் இருந்து 10 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாமென்று உரிமையாளர்கள் தரப்பில் சொல்லவில்லை. பயணிகள் கொடுக்கும் நாணயத்தை கண்டக்டர்கள் மறுக்காமல் கண்டிப்பாக வாங்கிக் கொண்டு டிக்கெட் வழங்க வேண்டும். இது குறித்து அனைத்து பஸ் உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்' என்றார்.இனி இதுபோன்று நிகழாது...அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் (சட்டம்) ராஜேந்திரன் கூறுகையில், 'பஸ் பயணிகளிடம் 10 ரூபாய் நாணயம் ஒரு சில கண்டக்டர்கள் வாங்க மறுப்பதாக அறிந்தோம். போக்குவரத்து கழகத்தில் அப்படி யாரும் சொல்லவில்லை. பயணிகளிடம் மறுப்பு தெரிவிக்காமல் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள அனைத்து கண்டக்டர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம். எனவே, இப்பிரச்னை இனி இருக்காது' என்றார்.

மூலக்கதை