எனக்கும் ரஷ்யாவிற்கு எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்

தினமலர்  தினமலர்
எனக்கும் ரஷ்யாவிற்கு எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வானதற்கு ரஷ்யாவின் மறைமுக உதவி இருப்பதாக குற்றசாட்டு வெளியாகி பரபரப்பாக பேசப்படும் நிலையில், ‛எனக்கும் ரஷ்யாவிற்கு எந்த தொடர்பும் இல்லை' என்று டிரம்ப் பேட்டியில் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வான பிறகு முதல்முறையாக ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:
நான் செலுத்திய வரி விபரங்களை தற்போது வெளியிடப்போவதில்லை அது தற்போது தணிக்கையில் உள்ளது. எனது தொழில்களை எனது இரண்டு மகன்களும் கவனித்து வருகின்றனர். அது குறித்து எந்த கருத்துக்களும் அவர்கள் என்னிடம் பகிரப்போவதில்லை. நான் எனது தொழிலில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்து விலகிவிட்டேன்.

ரஷ்யா குறித்து கருத்து



என்னை பற்றி தவறாக வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் செய்திகள் முற்றிலும் போலியானது. எனக்கு ரஷ்யாவுடன் கடனோ, நிலுவை தொகையோ என எந்த வித தொடர்பும் இல்லை. ரஷ்ய அதிபர் புட்டினிற்கு என் மீது நல்ல அபிமானம் ஏற்பட்டால் அது எனது பெரிய சொத்தாக கருதுவேன்.

அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு



ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்காவிற்கு ரஷ்யா உதவலாம். இதுவரை இல்லாத அளவில் அமெரிக்கர்களுக்கு பல வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன். அமெரிக்காவில் அமையவுள்ள அமைச்சரவை இதுவரை இல்லாத சிறந்த அமைச்சரவையாக அமையும். ஒபாமா கொண்டு வந்த ஒபாமா கேர் திட்டம் ஒரு தோல்வியான திட்டம் அந்த திட்டம் மாற்றியமைக்கப்படும்.

மெக்சிகோ சுவர்


நான் பதவியேற்றவுடன் உடனடியாக பல திட்டங்கள் கையெழுத்தாகவுள்ளன அதில் முக்கியமாக அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் இரு நாடுகளையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் இரு நாட்டிற்கு உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.'' என கூறினார்.

மூலக்கதை