ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்: பிரதமர் மோடிக்கு சசிகலா கோரிக்கை கடிதம்

தி இந்து  தி இந்து
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்: பிரதமர் மோடிக்கு சசிகலா கோரிக்கை கடிதம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்திய கடிதத்தை பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்பிக்கள் அளித்தனர்.

அதிமுக எம்பிக்கள், மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் இன்று டெல்லி சென்று, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேயை சந்தித்து, மனு அளித்தனர்.

அப்போது அமைச்சரிடம் மு.தம்பிதுரை, ''தமிழக இளைஞர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து இந்த விவகாரத்தை தள்ளி வைத்து வருகிறது. விரைவில் தீர்வு காண வேண்டும்'' என்றார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் தவே, ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம். மற்ற துறைகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்'' என அவருக்கு பதிலளித்தார். தொடர்ந்து, அதிமுக எம்பிக்கள் பிரதமர் மோடியை சந்திக்க அவரது அலுவலகம் சென்றனர். அங்கு பிரதமர் மோடியின் செயலாளரிடம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை அளித்தனர்.

அக்கடிதத்தில் சசிகலா கூறியிருப்பதாவது:

விவசாயம் சார்ந்த கலாச்சாரத்துடன் இணைந்தது ஜல்லிக்கட்டு. பாரம்பரிய பழக்க வழக்கங்களை பாதுகாக்கவும், காளையினங்களை பாதுகாக்கவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்காக காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. மற்ற விளையாட்டுக்களில் குதிரைகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளைப் போல் காளைகளுக்கு எவ்வித தொந்தரவும் தரப்படுவதில்லை.

ஜல்லிக்கட்டு மீதான தடை தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்பாக பரவலாக அதிருப்தி நிலவுவதால், நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காளைகளை அடக்கும் போது இளைஞர்களின் வீரம் வெளிப்படும் என்பதுடன் அது பாரம்பரிய உரிமை என்பதால் தொடர்ந்து நடத்தப்ட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். எனவே, காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டின் மீதான தடை நீக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியடைவார்கள். உற்சாகமாக பொங்கலைக் கொண்டாடுவார்கள்.

இவ்வாறு அக்கடிதத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.

Keywords: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கஅவசர சட்டம் கொண்டுவர வேண்டும்பிரதமர் மோடிக்குசசிகலா கோரிக்கை கடிதம்

மூலக்கதை