மிதியடியில் தேசிய கொடி: அமேசான் நிறுவனத்துக்கு சுஷ்மா கடும் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
மிதியடியில் தேசிய கொடி: அமேசான் நிறுவனத்துக்கு சுஷ்மா கடும் எச்சரிக்கை

புதுடில்லி: இந்திய தேசிய கொடி போன்று கால் மிதியடி தயாரித்து இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனத்திற்கு சுஷ்மா சுவராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய தேசிய கொடி அவமதிப்பு



பிரபல ஆன்-லைன் வர்த்தக இணையதளமான அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடி போன்று பல டிசைன்களில் கால் மிதியடி தயாரித்து தனது இணையதளம் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு விட்டுள்ளது.

விற்பனைக்கு வெளியான அரை மணி நேரத்தில் இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமேசான் நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சுஷ்மா கடும் எச்சரிக்கை

இந்திய தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் அமேசான் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து பொருட்களையும் திரும்ப பெற வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனம் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
உடனடி மன்னிப்பு கேட்காவிட்டால், அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்திய விசா வழங்கப்படாது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விசாக்களும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக, இதேபோல், பெண்கள் அணியும் லெக்கின்ஸ் ஆடைகளில் இந்து கடவுளின் படம் பொறித்து விற்பனைக்கு வந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை