நெருங்கி வரும் பொங்கல்... தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நெருங்கி வரும் பொங்கல்... தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என கல்லூரி மாணவர்கள், மாடுபிடி ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பேரணி, போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. வெள்ளலூரை சுற்றி உள்ள 60 கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர்களும், பொது மக்களும் தாமாக முன்வந்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் செயிண்ட் ஜோசப் பள்ளி அருகில் ஒன்று கூடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட பேரணி தமுக்கம் மைதானம் அருகே நடைபெற்றது. பேரணியின் போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவர்களை தடியால் அடித்தனர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி 2000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சியின் அருகில் ஒன்று கூடிய மாணவர்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் புதுக்கோட்டையிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலக்கதை