பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது காலணி வீச்சு – கண்ணாடி உடைந்தது

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது காலணி வீச்சு – கண்ணாடி உடைந்தது

பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன. ஆட்சியைத் தக்க வைப்பதற்காக அகாலி தளம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று முக்த்சர் மாவட்டம் லாம்பியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது காலணியை கழற்றி முதல்வரை நோக்கி வீசினார். அந்த காலணி முதல்வரை தாக்கியது. அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் பாதல் அங்கிருந்து வெளியேறினார். அவர் மீது காலணியை வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதல் மீது காலணி வீசுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, 2014ம் ஆண்டு இஸ்ரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பாதல் பங்கேற்றபோது, அவர் மீது ஒருவர் காலணியை வீசினார்.

பாதல் அரசாங்கத்தின் திட்டப் பணிகள் பஞ்சாப் மக்களை பெரிய அளவில் கவரவில்லை என்று கூறும் வகையில் அடுத்தடுத்து அவருக்கு எதிரான சம்பவங்கள் நடந்துள்ளன. முதல் நாள் பிரசாரத்தின்போது, வாக்குறுதி அளித்தபடி கழிவறைகள் கட்டுவதற்கான மானியம் தரவில்லை என்று கூறி கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அவரது பிரசார உரையில் இடையூறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது, அவருடன் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி சிலர் தாக்குதல் நடத்தினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் லாம்பி தொகுதியிலும், அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை