கேரளாவில் 'பைரவா'வுக்கு சிக்கல்: திரையரங்க உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

தி இந்து  தி இந்து
கேரளாவில் பைரவாவுக்கு சிக்கல்: திரையரங்க உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

கேரளாவில் திரையரங்க உரிமையாளர்களுக்கு 'பைரவா' விநியோகஸ்தர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

மலையாளத் திரையுலக தயாரிப்பாளர்கள் & விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே போராட்டம் வெடித்துள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்களில் புதுப்படங்களின் வசூலில் முதல் வாரம் பாதிக்குப் பாதி கொடுப்பதைப் போல, இதர திரையரங்களும் கொடுக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர் சங்கம் வைத்த கோரிக்கையை தயாரிப்பாளர்கள் & விநியோகஸ்தர்கள் சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

இப்பிரச்சினையில் கடந்த 3 வாரங்களாக எந்த ஒரு புதிய மலையாள படமும் வெளியாகாமல் உள்ளது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், இப்பிரச்சினையில் 'பைரவா' படமும் சிக்கியுள்ளது. திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் சட்ட ரீதியாக கடுமையாக எச்சரித்து அறிக்கை ஒன்றை 'பைரவா' படத்தின் கேரள விநியோகஸ்தர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த அறிக்கையில், "இந்த அறிக்கையின் வாயிலாக 'பைரவா' தமிழ்த் திரைப்படத்தின் கேரள திரையரங்குகள் உரிமையை இஃபார் இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், கோட்டயத்தைச் சேர்ந்த சஜுயம் சினி ரிலீஸ் நிறுவனம் பைரவா படத்திற்கான விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

'பைரவா' படத்தை திரையிட கோட்டயம் சஜூயம் சினி ரிலீஸ் நிறுவனத்திட ஒப்பந்தம் செய்துள்ளவர்கள் இவ்வறிக்கை மூலாக நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், "கேரள திரைப்பட காட்சியாளர்கள் கூட்டமைப்பு வரும் 12-ம் தேதி (12.01.2017) முதல் திரையரங்குகளை மூட முடிவு செய்திருக்கிறது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு 2002 நுகர்வோர் போட்டிகள் சட்டத்துக்கு புறம்பானதாகும்.

ஒருவேளை எங்களுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்த நீங்கள் கேரள திரைப்பட காட்சியாளர்கள் கூட்டமைப்பின் முடிவுக்கு ஒத்துழைத்தீர்கள் என்றால் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். நஷ்ட ஈட்டை சட்ட விதிகளுக்கு உட்பட்டு வசூலிப்போம்.

எனவே, ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீங்கள் பைரவா திரைப்படத்தை திரையிடாவிட்டால் அது சட்டத்தை அத்துமீறும் செயலாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். அதிகமான திரையரங்குகளில் வெளியிட்டால் மட்டுமே, அப்படத்தின் விநியோகத்தில் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்பதால் இம்முடிவை எடுத்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

நாளை (ஜனவரி 12) 'பைரவா' வெளியாகவுள்ள சூழலில், திரையரங்க உரிமையாளர்களின் இறுதிமுடிவு என்ன என்பது இன்று மாலைக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை