'வட சென்னை' அப்டேட்: விஜய் சேதுபதி விலகல்

தி இந்து  தி இந்து
வட சென்னை அப்டேட்: விஜய் சேதுபதி விலகல்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வட சென்னை' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

'விசாரணை' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'வடசென்னை'. தனுஷ், சமுத்திரக்கனி, அமலா பால் டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான மத்திய சிறைச்சாலை அரங்கில் நடைபெற்றது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் 'விசாரணை' ஆஸ்கர் விருதுக்கு தெரிவு செய்யப்பட அதற்கான பணியில் இறங்கினார் வெற்றிமாறன். தற்போது அப்பணிகள் முடிந்து, மீண்டும் 'வட சென்னை' பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் விஜய் சேதுபதி. ஆனால், கொடுக்கப்பட்ட தேதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட விஜய் சேதுபதியை அணுகியது படக்குழு.

ஆனால், தேதிகள் இல்லாததால் அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை ஒப்பந்தம் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. மார்ச் மாதத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது படக்குழு.

மூலக்கதை