ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விஜய் சேதுபதி ஆதரவுக் குரல்

தி இந்து  தி இந்து
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விஜய் சேதுபதி ஆதரவுக் குரல்

ஜல்லிக்கட்டுப் போட்டி பாதுகாப்பாக நடத்தப்பட வேண்டும் என்று விஜய் சேதுபதி ஆதரவாக தன்னுடைய குரலைப் பதிவு செய்துள்ளார்.

இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழகம் எங்கும் ஆதரவு பெருகி வருகிறது. இப்போட்டிக்கு கமல், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஜல்லிக்கட்டு, விஜய் சேதுபதியும் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் கூறியிருப்பது:

"ஜல்லிக்கட்டைப் பற்றி பரவலாக நிறைய கருத்துக்கள் பேசப்படுகிறது. மாடுகளை வதைக்கிறார்கள் என சொல்கிறார்கள், நம் இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என சொல்கிறார்கள். எனக்கு மாடுவதை எங்கு நடக்கிறது என தெரியவில்லை. இது என்னுடைய கருத்தாக பதிவு செய்து கொள்கிறேன்.

ஆனால், நம் இனங்கள் அழிக்கப்பட்டு விடுமோ என்ற பயம் எனக்கு கண்டிப்பாக இருக்கிறது. இப்படித்தான் நாட்டுக்கோழியில் ஒன்றுமே இல்லை என கறிக்கோழியை அறிமுகப்படுத்தினார்கள். சில நாட்கள் கழித்து அதில் பிரச்சினையுள்ளது, வியாதி வரும் எனச் சொல்கிறார்கள். முதலில் கறியை வைத்து பல்தேய்த்துக் கொண்டிருந்தோம். அதை கிண்டல் செய்து விளம்பரம் எடுத்தார்கள். இப்போது டூத் பேஸ்ட்டில் கறி இருக்கிறதா எனக் கேட்கிறார்கள்.

இப்படி இங்கு பிறந்து வாழ்ந்த நமக்கு இங்கு உரிமை இருக்கிறதோ, அதே போல் மற்ற ஜீவராசிகள், கால்நடைகளுக்கும் உரிமை இருக்கிறது. 'பூலோகம்' படத்தில் "உலகின் எந்த மூலையில் எந்த பிரச்சினை கிளம்பினாலுமே சரி, அதற்குப் பின்னால் ஒரு வியாபாரமும், வியாபாரியும் இருப்பார்" என வரும். அப்படித்தான் இந்தப் பிரச்சினையும் பார்க்கிறேன்.

அவங்க நம்ம கண்ணைக்கட்டி மறைத்து, மசாலாக்களை தூவுகிறார்களோ என நான் நம்புகிறேன். என்ன நடந்தாலும் சரி இங்குள்ள கால்நடைகளும், ஜீவராசிகளும் இங்குத் தான் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக வேறொரு மாடுகளைக் கொண்டுவருவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

மெல்ல மெல்ல இதைப் பற்றி பேசி, நம்மிடமிருந்து அழித்து விடுவார்களோ என பயப்படுகிறேன். எனக்கு தெரிந்த விஷயங்கள், தகவல்களை வைத்து இதைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறேன். ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். அனைவருக்கு பாதுகாப்போடு நடக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி

ஜல்லிக்கட்டைப் பற்றி விஜய் சேதுபதி பேசியுள்ள வீடியோ பதிவு:

மூலக்கதை