சகாரா, பிர்லா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: மோடிக்கு எதிரான மனு ...

தினத்தந்தி  தினத்தந்தி
சகாரா, பிர்லா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: மோடிக்கு எதிரான மனு ...


புதுடெல்லி,  
சகாரா, பிர்லா ஆகிய நிறுவனங்களிடம் இருந்து நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சகாரா, ஆதித்யா பிர்லா ஆகிய நிறுவனங்களில் கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அங்கு கிடைத்த டையிரியில் அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி மற்றும் சில அரசியல்வாதிகள் பெயர் இடம்பெற்று இருந்தது. அவற்றின் மூலம் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, ரூ. 60 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பான ஆவணங்கள் என டுவிட்டரில் தகவல்களையும் வெளியிட்டார். 
டெல்லி முதல் - மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இது தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று காமன் காஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொண்டு நிறுவனம் சார்பாக பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் ஆஜாராகினார். கடந்த மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு, உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதையடுத்து இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
கூடுதல் ஆவணங்கள், இ-மெயில் உள்ளிட்டவற்றை தொண்டு நிறுவனம் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டும் போது போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் தாக்கல் செய்த ஆதாரங்கள் எதுவும் நேரடியாக இல்லை. அனைத்தும் மறைமுக குற்றசாட்டுகள் தான். வழக்கின் ஆரம்பகட்டத்திலேயே இந்த குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டவை என தெளிவாக தெரிகிறது.
 எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். உரிய ஆதாரங்களை கொண்டு வந்தால் இந்த கோர்ட்டு அதை பரிசீலிக்கும் என்றனர்.

மூலக்கதை