உதய் மின் திட்டத்தை ஜெயலலிதா ஏன் எதிர்த்தார்.. ஓபிஎஸ் ஏன் ஆதரித்தார்.. மு.க.ஸ்டாலின் கேள்வி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உதய் மின் திட்டத்தை ஜெயலலிதா ஏன் எதிர்த்தார்.. ஓபிஎஸ் ஏன் ஆதரித்தார்.. மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: மத்திய அரசின் உதய் மின்திட்டத்திற்கு, மின்சாரத் துறை அமைச்சர் டெல்லிக்குச் சென்று சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதா எதிர்த்த இந்தத் திட்டத்தை ஏன் ஓ. பன்னீர்செல்வம் ஆதரிக்கிறார் என்பது புரியவில்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிம் ஸ்டாலின் கூறியதாவது:

மத்திய அரசின் உதய் மின்திட்டத்திற்கு மின்சாரத் துறை அமைச்சர் டெல்லிக்குப் போய் சம்மதம் தெரிவித்து வந்திருக்கிறார். உதய் திட்டத்தைப் பொருத்தவரையில் ஜெயலலிதா, திட்டவட்டமாக ஏற்க முடியாது என்று கூறினார். ஆனால் இப்போது அவர் மறைந்துவிட்ட நிலையில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஏன் இந்த மாற்றம் என்பது எங்களுக்கு புரியவில்லை. இது குறித்து மக்களிடத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

2011ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு முறை மொத்தம் 57 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த உதய் மின் திட்டத்தின் மூலமாக மேலும் மின் கட்டணம் உயரும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல தற்போது விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. உதய் மின் திட்டத்தால் அது நிறுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

நேற்றைக்குக் கூட மின் துறை அமைச்சர் இந்த உதய் திட்டத்தின் மூலமாக 11,000 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் ஏற்படுகிறது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அடிப்படையில், மின்சாரக் கட்டணத்தை உடனடியாக குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுமா என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மூலக்கதை