புதுப்பானையில் பொங்கல் வைத்த பெண்கள்... உற்சாகமாக பங்கேற்ற பாமக அன்புமணி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதுப்பானையில் பொங்கல் வைத்த பெண்கள்... உற்சாகமாக பங்கேற்ற பாமக அன்புமணி

சென்னை : பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாமக லோக்சபா எம்.பி அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

வண்ண வண்ண கோலம் போட்டு கரும்புகள் தோரணங்களாய் அலங்கரிக்க மஞ்சள் கொத்து கட்டப்பட்ட புத்தம் புது பானையில் பெண்கள் பொங்கல் வைத்தனர்.

பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், கரும்பை கையில் எடுத்து பொங்கல் பானையில் கிண்டிவிட்டார். அப்போது பெண்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் தற்கொலை செய்து வரும் சூழலில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது சரியானது அல்ல என தெரிவித்தார்.வறட்சி மாநிலமாக மாநில அரசு அறிவித்தது மட்டுமின்றி மத்திய அரசும் அறிவித்து அதற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுகொண்டார்.

மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் எந்த தவறும் இல்லை எனவும் அன்புமணி கூறியுள்ளார்.

 

 

விவசாயிகள் மரணமடையும் போது பொங்கல் விழா கொண்டாடுவது சரியானதல்ல என்று கூறியுள்ள அன்புமணி கடந்த வாரம், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சித்தேரி ஊராட்சி பேரேரி கிராமத்தில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

பசுமைதாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டு சித்தேரி ஊராட்சியை சேர்ந்த கிராமமக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்கள் கும்மி அடித்து பாட்டுப்பாடி நடனமாடினர்.

மூலக்கதை